Xதடுப்பூசி செலுத்திக் கொள்ள கெடு!

Published On:

| By Balaji

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் டிசம்பர் மாத இறுதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று நவம்பர் 19ஆம் தேதி சுகாதாரத் துறை அறிவித்தது.

சுகாதாரத் துறையின் இந்த உத்தரவை பல்வேறு மாவட்டங்கள் செயல்படுத்த ஆரம்பித்துள்ளன. முதலில் விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும். அப்படி செலுத்தவில்லையென்றால், நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறிசந்தை, துணிக்கடை, ஹோட்டல் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களுக்கும் செல்ல தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி போடாமல் பொதுவெளியில் நடமாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

தற்போது மதுரை மாவட்டத்திலும் ரேஷன் கடை, தியேட்டர், வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், துணிக்கடைகள், வங்கிகள்,ஹோட்டல்கள், லாட்ஜ்கள், மனமகிழ் மன்றம், ஷாப்பிங் மால், கல்வி நிலையங்கள், திருமண மகால், மார்க்கெட், மதுக்கடை உள்ளிட்ட 18 பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஒருவார கால அவகாசம் அளிக்கப்படும். அதற்குள் அனைவரும் செலுத்தியிருக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு பிறகும் தடுப்பூசி செலுத்தவில்லையென்றால், மேலே கூறப்பட்ட பொது இடங்களில் அனுமதி மறுக்கப்படும். என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வங்கிகள்,ரேஷன் கடைகள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காட்டினால் மட்டுமே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடைகள் அவர்களை உள்ளே செல்ல அனுமதி வழங்க வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share