<துணை ஆய்வாளர் தற்கொலை!

Published On:

| By admin

திருச்சி அருகே காவல்துறை துணை ஆய்வாளர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் இக்பால் காலனியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவரது கணவர் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர். பெயர் நடராஜன். இவர்களுக்கு லெனின், பரத் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

ஆதிலட்சுமி திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பெண் காவலர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவர் தனது அறையை விட்டு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் கதவை உடைத்து விட்டு உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது அறையிலிருந்த மின் விசிறியில் ஆதிலட்சுமி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து தகவலறிந்து ஆதிலட்சுமி வீட்டுக்கு வந்த நவல்பட்டு போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆதிலட்சுமி இரு வங்கிகளில் கடன் வாங்கி இருப்பதும், சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து ஆதி லட்சுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் காவல்துறை பெண் துணை ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்டது திருச்சி போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share