பப்ஜி மதனிடம் பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்கலாம் என மத்திய குற்றப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை முறைகேடாக யூடியூபில் விளையாடியதுடன் சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதற்காக சேலத்தைச் சேர்ந்த மதன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தர்மபுரியில் உள்ள உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த மதனை நேற்று போலீசார் கைது செய்தனர். மதனை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.
ஆதரவற்றவர்களுக்கு உதவுவதாக கூறி மதன், கூகுள் பே மூலம் பலரிடம் பணம் பெற்றுள்ளதும், யூடியூப் மூலம் கோடிக் கணக்கில் சம்பாதித்த மதன் ஒன்றரை ஆண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதனிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தை போலீசார் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின் சைதாபேட்டை நீதிமன்றத்தில் மதன் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
மதனை நம்பி பணத்தை இழந்தவர்கள் DCPCCB1@GMAIL.COM என்ற முகவரியில் புகார் அளித்தால், அவர்களது பணத்தை திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 5 ஆயிரம் ரூபாயாக இருந்தாலும்கூட புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என மத்திய குற்றப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைதான மதன் மனைவி கிருத்திகா வங்கி கணக்கில் மட்டும் ரூ. 4 கோடி பணம் மற்றும் தாம்பரம், பெருங்களத்தூரில் 45 லட்சம் மதிப்பில் சொகுசு வீடுகள், 2 சொகுசு கார்கள் , பல லட்சம் மதிப்பில் தங்க, வைர நகைகள் உள்ளிட்டவைகளை ஏற்கனவே பறிமுதல் செய்த போலீசார், வங்கி கணக்கையும் முடக்கினர்.
முன்னதாக, சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மதனை போலீசார் அழைத்து வந்தபோது, ஒளிப்பதிவாளர்கள் அவரை சுற்றி வீடியோவும் போட்டோவும் எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மதன், ”நான் என்ன பிரைம் மினிஸ்டரா… எதற்கு வளைத்து வளைத்து வீடியோ எடுக்குறீங்க’ என்று கோபமாக கேட்டுள்ளார். அதற்கு, ‘நீ அக்யூஸ்ட்’ என்று கூறி போலீசார், மதனை உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர்.
**-வினிதா**
�,