திமுக தலைவர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.
திமுக பொதுக் குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. அதில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன், விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் இன்று (நவம்பர் 12) சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வரவேற்புக்குரியவையாக இருந்தன. தற்போது, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் பன்மைத்துவத்தை சிதைத்து ஒருமைத்துவத்தை நோக்கி நாட்டை மத்திய அரசு நகர்த்திக்கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்கிற வகையிலும் திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது வரவேற்கத்தக்கது. அதுபோலவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு தீர்மானமும், தனியார் துறையில் இடஒதுக்கீடு என்கிற தீர்மானமும் பாராட்டத் தகுந்தது. சமூக நீதிக்கான குரல் அண்ணா அறிவாலயத்திலிருந்து மீண்டும் உரத்து ஒலிக்கிறது” என்று தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் குறித்த கேள்விக்கு, “திமுக தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்புடனும், நல்லிணக்கத்தோடும் இருக்கிறது. எங்கள் கூட்டணி சட்டமன்றத் தேர்தல் வரை வெற்றிகரமாக பயணிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வந்தாலும் அதையும் கூட்டணியாக நாங்கள் சந்திப்போம்” என்றும் குறிப்பிட்டார்.
திருமாவளவனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளோடு ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வகுப்பு வாத சக்திகள் தலைதூக்கியிருக்கும் நேரத்தில் திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர் விருப்ப மனுக்கள் பெறுவது தொடர்பான அறிவிப்பை திமுக நேற்று வெளியிட்டது. இதனையடுத்து, இன்று திருமாவளவனும், முத்தரசனும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அதில், உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு தேவையான இடங்கள் குறித்து இந்த சந்திப்பில் முதற்கட்டமாக அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறார்கள். இரு தலைவர்களும் தங்களுக்கு தேவையான இடங்கள் குறித்து ஸ்டாலினிடம் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். விரைவில் திமுக கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களும் ஸ்டாலினை சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, திமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீட்டை தற்போதே துவங்கிவிட்டது.
�,”