qஉதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக திருமாவளவன்

Published On:

| By Balaji

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேற்று (நவம்பர் 17) திடீரென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வருகிற இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை அதிமுகவினர் சரமாரியாக விமர்சித்து வரும் சூழலில்… திமுக கூட்டணியின் முக்கியத் தலைவரான திருமாவளவன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசிய கருத்துகள் மேலும் சில யூகங்களையும் திமுகவினர் மத்தியிலேயே ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரை சந்தித்துவிட்டு வந்த திருமாவளவன், “உள்ளாட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும், சென்னை மாநகராட்சியை தலித்துகள் போட்டியிடும் தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

சென்னையை ரிசர்வ் மாநகராட்சியாக அறிவிக்கக் கோரி நீதிமன்றத்திலே வழக்கும் தொடுத்திருக்கிறோம். நீண்ட காலமாக இந்த கோரிக்கையை முன் வைத்து வருகிறோம். ஒப்பீட்டளவில் சென்னையில் கணிசமான தலித் மக்கள் இருக்கிறார்கள் என்பதால் இக்கோரிக்கையை வலியுறுத்துகிறோம்”என்றார் திருமாவளவன்.

திருமாவளவனின் சென்னை மாநகராட்சியை மையப்படுத்திய இந்த தொடர் கோரிக்கை திமுகவினரை எரிச்சல் படுத்தியிருக்கிறது. காரணம் சென்னை மாநகராட்சியில் உதயநிதி ஸ்டாலின் மேயர் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என்று பலரும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். ஸ்டாலினை எப்படி 96 இல் சென்னை மேயர் ஆக்கினோமோ அதேபோல உதயநிதியை இப்போது மேயர் ஆக்கலாம் என்று திமுகவினர் தீவிர முயற்சியில் இருக்கிறார்கள். இதனால்தான் உதயநிதியை முன்னிலைப்படுத்தி அதிக விருப்ப மனுக்கள் இளைஞரணி நிர்வாகிகளால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் சென்னையை தலித் மாநகராட்சி ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருமாவளவன் கூர் தீட்டுகிறார் என்றால் அது உதயநிதிக்கு எதிரான அப்பட்டமான அரசியல்தானே என்கிறார்கள் திமுகவினர். இதை திமுகவினர் ரசிக்கவில்லை. இரட்டைப் பதவியில் இருக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்து மேயர் பதவியில் இருந்த ஸ்டாலினுக்கு ஜெயலலிதா செக் வைத்தது போல, உதயநிதிக்கு செக் வைக்க திருமாவளவனின் இந்த கோரிக்கையையே முதல்வர் பயன்படுத்திக் கொண்டாலும் ஆச்சரியம் இல்லை.

“ஏற்கனவே விக்கிரவாண்டி தேர்தல் தோல்வி குறித்து வெளிப்படையான விமர்சனங்களை திமுக தலைமை மீது வைத்தார் திருமாவளவன். இப்போது சென்னையை தலித் மாநகராட்சி ஆக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்தை அணுகாமல் ஏன் முதல்வரிடம் அணுகி கோரிக்கை வைக்க வேண்டும்?” என்றும் கேட்கிறார்கள் திமுகவினர்.

திமுகவினருக்கும் சிறுத்தைகளுக்கும் அடுத்த கட்ட உரசல் உள்ளூரப் பற்றியிருக்கிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share