புதுக்கோட்டை மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர், தனக்கு வாக்களிக்காத வாக்காளர்களை சந்தேகப்பட்டு சாமி மீது சத்தியம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். அதனால், கடுப்படைந்த ஒருவர், அவரின் காதைக் கடித்துத் துப்பிய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இருகட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டு, வாக்கு எண்ணும் பணிகள் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
கடந்த 9ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி அருகே மாங்காடு ஊராட்சியில் இடைத்தேர்தல் நடந்தது. இதில், கீதா துரையரசன் பூட்டுச்சாவி சின்னத்திலும், ஜானகி செல்வராஜ் ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டனர். இவர்கள் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவியது.
தேர்தலுக்கு முன்னதாக, இரவும் பகலும் வாக்காளர்களின் வீடு வீடாக சென்று ஆளுக்கு ஏற்றார் போல் ரூ. 300 முதல் 500 வரை பணம் கொடுத்து, ‘எனக்குத்தான் ஓட்டு போட வேண்டும்’ என்று சத்தியமும் பெற்றுள்ளனர்.
வாக்காளர்களும் இருவரிடமும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, ‘உங்களுக்குதான் ஓட்டு போடுவோம்; என்று இருவரிடமும் சத்தியம் செய்தனர்.
இந்நிலையில் மாங்காடு சுந்தரகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விஜயசுந்தரம் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி தனது வீட்டு அருகில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஜானகி செல்வராஜ் ஆதரவாளரான குமரேசன் என்பவர் `ஆட்டோவுக்கு ஓட்டுப்போடாமல், பூட்டுச் சாவிக்கு ஏன் ஓட்டு போட்டாய்’ என்று கேட்க, ஆட்டோவுக்குதான் ஓட்டு போட்டேன் என்று விஜயசுந்தரம் பதில் சொன்னார். அப்படி என்றால் நம்ம ஊர் மாரியம்மன் கோயிலில் வந்து சத்தியம் செய் என்று குமரேசன் கேட்டுள்ளார்.
இருவருக்கும் வார்த்தைகள் தடித்துப்போய் கைக் கலப்பு ஏற்பட்டது.
இதனிடையே, இந்த சண்டை குறித்து தெரிந்த விஜயசுந்தரம் மகன் சதீஷ்குமாரும், அவருடைய அம்மா ராஜலட்சுமியும் மாரியம்மன் கோயிலுக்கு சென்று சண்டையை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது, ராஜலெட்சுமியையும், சதீஷ்குமாரையும் குமரேசன் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், குமரேசனின் காதைக் கடித்துத் துப்பிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குமரேசனின் உறவினர்கள், கடித்து துப்பப்பட்ட காதைத் தேடி எடுத்துக் கொண்டு குமரேசனையும் அழைத்துக்கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*வணங்காமுடி*
�,