Rஜூன் 1 முதல் கோயில்கள் திறப்பு?

Published On:

| By Balaji

தமிழகத்தில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஜூன் 1 முதல் கோயில்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில்கள், மசூதிகள் என அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் மத வழிப்பாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனிடையே, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதிகளைத் திறக்க கோரி இஸ்லாமிய அமைப்பான தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அன்வர் பாதுஷா உலவி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதுகுறித்து மின்னம்பலத்தில் [மசூதிகளைத் திறக்க வேண்டும்: முதல்வருக்குக் கடிதம்!](https://minnambalam.com/public/2020/05/11/70/masques-must-reopen-letter-to-edapadi-from-muslim-association) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதுபோன்று, கோயில்கள் உள்பட அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களையும் திறக்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால், வழிப்பாட்டுத் தலங்கள் திறப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கோயில்களைத் திறக்க அரசு அனுமதி அளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுமார் 40ஆயிரம் கோயில்கள் உள்பட அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களும் ஜூன் 1ஆம் தேதி முதல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட அளவு பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், பக்தர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கோயில்களைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கோயில்களை ஜூன் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பது தொடர்பாக அறநிலையத்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share