ராமஜென்மபூமி- பாபர் மசூதி: அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு!

Published On:

| By Balaji

அயோத்தி சர்ச்சை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 9) முக்கியத் தீர்ப்பை வழங்கவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அரசியல் சாசன அமர்வில் இருக்கும் மற்ற நான்கு நீதிபதிகளுடன் நேற்று (நவம்பர் 8) ஆலோசனை நடத்தியுள்ளார். இதன் பிறகு இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி நவம்பர் 17ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அதற்குள் தீர்ப்பு வழங்கத் திட்டமிடப்பட்டது. எனினும் தேதி குறிப்பிடப்படாமல் இருந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாகக் கூறப்படுகிற சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது? என்ற 27 ஆண்டுகள் கேள்விக்கான விடை இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும்.

**வரலாறு சொல்வது என்ன**

1528-1529ஆம் ஆண்டில் அப்போதைய முகலாய பேரரசர் பாபரால் ஒரு மசூதி கட்டப்பட்டது, எனவே இது பாபர் மசூதி என்று அழைக்கப்பட்டது.

1850ல் இங்கு முதல் மதக் கலவரம் ஏற்படுகிறது. இந்து தரப்பு அந்த இடத்தை கையகப்படுத்த முயன்றதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், அப்போதைய காலனித்துவ ஆட்சியாளர்களால் அது மறுக்கப்பட்டது..

1946ல் இந்து மகாசபாவின் ஒரு பிரிவான அகில் பாரதிய ராமாயண மகா சபா, சர்ச்சைக்குரிய இடத்துக்காக ஒரு போராட்டத்தைத் தொடங்கியது.

1949- பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது. இது முஸ்லீம் தரப்பிலிருந்து ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு வழிவகுத்தது, இதையடுத்து இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்குச் சென்று சிவில் வழக்கு தாக்கல் செய்தனர். அப்போது மாநில அரசு அவ்விடத்தை சர்ச்சைக்குரிய இடம் என்று அறிவித்து, அந்த இடத்தின் கதவுகளை மூடியது.

1950- பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் இந்து தரப்பினரால் இரு வழக்குகள் தொடரப்படுகின்றன. அதில் ராமரின் சிலைகளை வணங்க அனுமதி கோரப்பட்டது.

1959ல் அந்த இடத்துக்கு நிர்மோகி அகாராவும் உரிமை கோரி மனுத் தாக்கல் செய்கிறது.

1961 – அங்குள்ள சிலைகளை அகற்றக் கோரி சன்னி வக்பு வாரியம் வழக்குத் தொடருகிறது.

1986- மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், பூட்டு அகற்றப்பட்டு, இந்துக்கள் வழிபடுவதற்காகத் திறக்கப்பட்டது.

1992- டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. பாபர் மசூதியின் சர்ச்சைக்குரிய இடம் குறித்து விசாரிக்க மத்திய அரசு லிபர்ஹான் ஆணையத்தை அமைத்தது.

2009 – இந்த விசாரணை ஆணையம் தனது அறிக்கையை 17 ஆண்டுகளுக்குப் பின்னர் சமர்ப்பித்தது. ஆனால், அறிக்கையில் இடம் பெற்று இருந்த சரத்துக்கள் வெளியாகவில்லை.

2010 – செப்டம்பரில், அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயோத்தி நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. ராம் லீலாவுக்கு மூன்றில் ஒரு பங்கு நிலம், சன்னி வக்பு அமைப்புக்கு மூன்றில் ஒரு பங்கு நிலம், நிர்மோஹி அகாராவுக்கு மூன்றில் ஒரு பங்கு நிலம் என்று பிரிக்கப்பட்டது.

ஆனால் இந்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ராமஜென்மபூமி–பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக உச்ச நீதிமன்றம் மூவர் குழுவை அமைத்தது. ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா தலைமையில், ஆன்மிகவாதி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாகக் கொண்ட மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. மத்தியஸ்தர் குழு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இவ்வழக்கு ஆரம்ப நிலைக்கே சென்றது.

சர்ச்சைக்குரிய இடம் குறித்து 14 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு 40 நாட்களாக விசாரணை நடத்தியது.

முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர்களுக்கு மிரட்டல், நீதிமன்றத்திலேயே அயோத்தி தொடர்பான புத்தகத்தைக் கிழித்தது என 40 நாட்களாகப் பரபரப்பாக நடைபெற்ற வாதங்கள் கடந்த மாதம் 16ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் இல்லத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் முஸ்லிம் அமைப்புகளும் கலந்து கொண்ட முக்கியமான கூட்டம் நடைபெற்றது. அயோத்தி தீர்ப்பை ஒரு வெற்றியாக அதிகமாக கொண்டாடுவதோ, தோல்வியாக கருதி விரக்தியடைவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும் என இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்திருந்தார்.

உபி மாநிலம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அம்மாநில அரசின் தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி மற்றும் காவல்துறை டி.ஜி.பி. ஓ.பி.சிங் ஆகியோருடன் தலைமை நீதிபதி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

**பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி**

தீர்ப்பு வழங்கவுள்ளதை அடுத்து உபியில் இன்று முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மாவட்டத்தில் டிசம்பர் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் மட்டும் சுமார் 12ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அயோத்தியின் அருகே 8 தற்காலிக சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4,000 துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 78 ரயில் நிலையங்கள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி தொடர்பான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உபியை போன்று கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பாதுகாப்பு கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரம் முழுவதும் 15,000 போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மசூதிகள், கோயில்கள் என முக்கிய வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

**பிரதமர் வேண்டுகோள்**

அயோத்தி வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும், அதனை எந்தவொரு குறிப்பிட்ட தரப்பினரின் வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருதாமல், தேசத்தின் அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமைக்கு அனைவரும் மேலும் வலுசேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share