திருச்சி அருகே மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் உடல் மீட்பு பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 31) விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
இன்று சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்,
”ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க அரசு எல்லாவிதமான முயற்சிகளையும் செய்தது. அனைத்து அறிவியல் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி எப்படியாவது அந்த சிறுவனை உயிரோடு கொண்டுவந்துவிட வேண்டும் என்று அனைவரும் போராடினோம். நான் கூட அங்கே செல்லவில்லை. ஊடகங்கள் 24 மணி நேரமும் அங்கிருந்து நேரடியாக தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள். அமைச்சர்கள், அதிகாரிகள், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆகியோர் அங்கேயே முகாமிட்டுப் பணியாற்றினார்கள்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லி அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார். நான் கோபப்படுவதாக சொல்கிறார். நான் உள்ளதைத்தான் சொல்கிறேன்” என்ற முதல்வர்,
“2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலே தேனி மாட்டத்தில் தோப்புப்பட்டியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான். ஆறு வயது சிறுவனாக இருந்தபோதும் அப்போது மீட்க முடியவில்லை. அப்போது அங்கே ஒரு அமைச்சர் கூட போகவில்லை. ஸ்டாலின் அப்போது துணை முதலமைச்சராக இருந்தார். அவரும் அங்கே போகவில்லை. ஆனால் இந்த அரசில் அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் அங்கேயே முகாமிட்டு மீட்புப் பணிகளை கவனித்து வந்தனர். தீபாவளி, மழை என எதையும் பொருட்படுத்தாமல் அந்த சிறுவனை மீட்பதை கடமையாக நினைத்து செய்தோம். ஆனால் சிறுவனை உயிரோடு மீட்க முடியாதது மிகுந்த வேதனையை எனக்கு ஏற்படுத்தியது” என்றும் கூறினார்.
மேலும் அவர், “ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்கிறார். தேசியப் பேரிடர் மேலாண்மை குழு என்பது துணை ராணுவப் படையில் இருப்பவர்கள்தான். துணை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுதான் தேசிய பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதுபத்தி வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் கொடுத்துவிட்டார். மத்திய அரசு உத்தரவின் பேரில்தான் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்”என்றும் குறிப்பிட்டார்.
சுஜித்தின் உடலைக் காட்டவே இல்லை என்று சமூக தளங்களில் சர்ச்சை நிலவுகிறதே என்ற கேள்விக்கு,
“அதாவது ஊடகங்கள் 24 மணி நேரம் அங்க இருந்தீங்க. நான் கூட அங்க போகல. ஆனா வேண்டுமென்றே தேவையில்லாத பிரச்சினைய கிளப்பிக்கிட்டே இருக்கீங்க. அவங்க பெற்றோர்களே ஒத்துக்கிட்டாங்க. கண்முன்னாடி வந்ததா சொல்றாங்க. நாங்க ஆறுதல் சொல்ல போனபோது எங்ககிட்ட சொல்றாங்க. மீண்டும் மீண்டும் தேவையில்லாத கருத்தை சொல்லி குழப்பம் வேணாம். இதுக்கு முற்றுப்புள்ளி வையுங்க. இனிமே இன்னொரு சம்பவம் நடக்காம இருக்கோணும். அதுக்கு ஊடகங்கள் துணையா இருக்கோணும்” என்று வேண்டுகோள் விடுத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
�,