பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரியில் நிதித் துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இரண்டு வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வங்கி ஊழியர்கள் சங்கங்கள் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தன. இதுதொடர்பாக இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், நிதித் துறை பிரதிநிதிகளுடன் முதலில் மும்பையிலும், நேற்று டெல்லியிலும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, திட்டமிட்டப்படி இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 90 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.
வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை திரும்ப பெறக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கி முன்பும் வங்கி ஊழியர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், ”வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் தமிழ்நாட்டில் ரூ.10,000 கோடி மதிப்பிலான 11 லட்சம் காசோலைகளும், நாடு முழுவதும் ரூ.37,200 கோடி மதிப்பிலான 40 லட்சம் காசோலை பரிவர்த்தனைகளும் பாதிக்கப்படும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை இன்னும் தீவிரமாக நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் சனி, ஞாயிற்றுகிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் மொத்தமாக நான்கு நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ஆனால், இணைய வழி சேவைகள் வழக்கமாக நடைபெறும். ஏடிஎம்களில் போதிய அளவு பணம் இருப்பு வைக்க வங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
**ஆதரவு**
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவு அளித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கடன் பெற்ற விவசாயிகள், சுயதொழில் செய்யும் மகளிர், கல்விக்கடன் பெற்ற மாணவர்களிடம் மனித உரிமைகளை மீறும் மிக மோசமான நடவடிக்கைகள் மூலம் கடன்களை வசூலிக்கத் துடிக்கும் வங்கி நிர்வாகங்கள் பெரிய நிறுவனங்கள் பெற்ற கடனை வசூலிப்பதில் காட்டுவதில்லை.
உழைத்துச் சம்பாதித்துப் பொதுத்துறை வங்கிகளில் போட்டுள்ள சேமிப்புகளைக் கூட சுரண்டுவதற்கு ஏதுவாக இதுபோன்ற வங்கி சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றிவிட ஒன்றிய பாஜக அரசு தீவிரம் காட்டுவது ஜனநாயக விரோதச் செயலாகும்.
நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் நம்பிக்கையாகத் திகழும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் முடிவினையும் அதுதொடர்பாக அவசர அவசரமாகக் கொண்டுவரும் வங்கிச் சட்டத் திருத்தத்தையும் எதிர்த்து வங்கி ஊழியர்கள் நடத்தும் இந்தப் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதுபோன்று விசிக தலைவர் திருமாவளவன் ட்விட்டரில், “நாடெங்கும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 9 லட்சம் பேர் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்கள் மேற்கொண்டிருக்கும் நியாயமான வேலை நிறுத்தப் போராட்டத்தை விசிக சார்பில் ஆதரிக்கிறோம். பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு கைவிடவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-வினிதா**
�,”