nகிருமி நாசினியால் கைரேகை அழியும் அபாயம்!

Published On:

| By Balaji

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை (சானிடைஸர்) பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பணிக்குச் செல்லும் ஊழியர்கள் அலுவலகத்துக்குச் செல்லும்முன்பும், பொது மக்கள் ஹோட்டல்கள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள், நகை, ஜவுளி கடைகளுக்குச் செல்லும் முன்பும் கைகளில் சானிடைஸரைத் தடவிய பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் அடிக்கடி கிருமிநாசினியைப் பயன்படுத்தினால் கைரேகை அழியும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அகமதாபாத்தைச் சேர்ந்த அன்சுல்வர்மன் என்ற சரும மருத்துவ நிபுணர், “தற்போது பல்வேறு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வருகைப் பதிவில் சிக்கல்கள் ஏற்படும்.

சானிடைஸர் உட்பட கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்துவதால் மேல் தோல் உரிதல் அதிகரிக்கும். இதன் காரணமாக ஆல்கஹால் தன்மை கொண்ட சானிடைஸருக்குப் பதிலாக சோப்பைப் பயன்படுத்தலாம். கிருமி நாசினியால் கைரேகை அழியும் நிலை ஏற்படும்போது வைட்டமின் ‘ஏ’ வகையான பொருட்களைப் பயன்படுத்தினால் தோல் வேகமாக மீண்டும் உருவாகும்” என்று கூறியுள்ளார்.

குஜராத் மருத்துவக் கல்லூரி டாக்டர் பிரனாய்ஷா என்பவரும், கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்துவதால், கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ளார்.

போபாலைச் சேர்ந்த நேகால் மிஸ்திரி என்பவர், “நான் நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 முறை கிருமி நாசினியைப் பயன்படுத்தினேன். தற்போது எனது கைரேகை சரியாகப் பதிவாகவில்லை. இது தொடர்பாக நான் சரும மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் பயோ மேட்ரிக் முறையைப் பயன்படுத்தும் அலுவலகத்தைச் சேர்ந்தவர்களில் 3 முதல் 4 சதவிகிதம் பேர் தங்களது கைரேகை பதிவாகவில்லை என்று முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share