�ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கின் இறுதி விசாரணை டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது.
2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த அக்டோபர் 4ஆம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. எனினும் இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.
இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அக்டோபர் 23, நவம்பர் 13, நவம்பர் 22 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வந்தபோது, மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
அதன்படி, இவ்வழக்கு நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (நவம்பர் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்பதுரை மற்றும் அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேவையான ஆவணங்களை நாங்கள் தாக்கல் செய்துவிட்டோம் எனத் தெரிவித்தனர். இதனை ஏற்ற நீதிபதிகள், மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக டிசம்பர் 11ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்தனர். வழக்கு விசாரணையும் அன்றைய தினத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதுவரை மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.�,