�வேளாண் சட்ட விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்கும்: குடியரசுத் தலைவர்!

Published On:

| By Balaji

புதிய வேளாண் சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்கும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தாமதமாகத் தொடங்கி, முன் கூட்டியே முடிக்கப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட வில்லை. இதைத் தொடர்ந்து நிதிநிலை கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 29) தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி, ஒரே நாடு, ஒரே ரேஷன், நாடு முழுவதும் 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைத்தல், 3ஆம் பாலினத்தோருக்குச் சம உரிமைகள் வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு சட்டம் ஆகியவை பற்றி தனது உரையில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,

“விரிவான ஆலோசனைகளுக்குப் பின்னர், 7 மாதங்களுக்கு முன்பு 3 வேளாண் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் உடனடியாக 10 கோடிக்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் பயனடையத் தொடங்கினர். இந்த சீர்திருத்தங்கள் மூலம் சிறு விவசாயிகளுக்குக் கிடைத்து வரும் நன்மைகளைப் பாராட்டி, பல அரசியல் கட்சிகளும் அவ்வப்போது தங்கள் ஆதரவை வெளிப்படுத்தின.

தற்போது புதிய வேளாண் சட்டங்களை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மத்திய அரசு மதிக்கும். அதற்குக் கட்டுப்படும். இந்த சட்டத்தின் மீதான தவறான புரிதலை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குடியரசு தினத்தன்று, தேசியக் கொடி அவமதிக்கப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, அனைவருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த முழு சுதந்திரத்தை அளிக்கிறது, அதே வேளையில் சட்ட ஒழுங்கை அனைவரும் மதித்து நடக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்துகிறது.

மூன்று புதிய சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற உரிமைகள் மற்றும் வசதிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பதை அரசு தெளிவுபடுத்த விரும்புகிறது. இந்த விவசாய சீர்திருத்தங்கள் மூலம் அரசாங்கம் விவசாயிகளுக்கு புதிய வசதிகளை வழங்கியுள்ளதுடன் அவர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து, அவர்களுக்கு உதவும் வகையில் பிரதமர் உழவர் நிதியுதவி திட்டத்தின் கீழ், ரூ.1.13 லட்சம் கோடியை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது” என மத்திய அரசின் புதிய சட்டங்கள் குறித்து உரையாற்றினார் குடியரசுத் தலைவர்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share