ஊட்டி: கோடை சீசனுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

Published On:

| By admin

ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஐந்தரை லட்சம் புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி நடைபெறும் மலர் கண்காட்சி சர்வதேச அளவில் புகழ் பெற்றது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020, 2021ஆம் ஆண்டுகளில் மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. தற்போது தொற்று குறைந்துள்ளதால் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. அதன்படி வருகிற மே மாதம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124ஆவது மலர் கண்காட்சி நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
அதில் சால்வியா, டெல்பீனியம், பென்ஸ்டிமன், ஜெரேனியம், சைக்லமன், சினரேரியா, ரெனுன்குலஸ், மேரிகோல்டு, பேன்சி, பிளாக்ஸ், பிகோனியா உள்பட 275 ரகங்களை சேர்ந்த ஐந்தரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக இத்தாலியன் பூங்கா, இலை பூங்கா, நடைபாதை ஓரங்கள், மரங்களைச் சுற்றிலும் என மலர் நாற்றுகளை பணியாளர்கள் நடவு செய்துள்ளனர். நீண்ட நாட்கள் வளர்ந்து பூக்கும் நாற்றுகள் முதலில் நடவு செய்யப்பட்டது. குறுகிய நாட்களில் மலரும் நாற்றுகள் தற்போது நடவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 35,000 பூந்தொட்டிகளில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
முன்னதாக மண், தேங்காய் நார், இயற்கை உரம் சேர்த்து பூந்தொட்டிகளில் நிரப்பப்பட்டது. பின்னர் பணியாளர்கள் நர்சரியில் பராமரித்த டேலியா உள்ளிட்ட மலர் நாற்றுகளை எடுத்து வந்து பூந்தொட்டிகளில் நடவு செய்தனர்.
இதற்கிடையில் நடவு செய்த நாற்றுகள் உறைபனியால் பாதிக்காமல் இருக்க கோத்தாரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் அவ்வப்போது செடிகளுக்குத் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் திறந்தவெளியில் உள்ள அலங்கார, மலர் செடிகள் பிளாஸ்டிக் போர்வை கொண்டு மூடப்படுகிறது. வருகிற ஏப்ரல் மாதத்தில் செடிகளில் மலர்கள் பூக்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share