இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதிய வைரஸ் வேகமாகப் பரவும் சூழலில் பிரிட்டனிலிருந்து நிலைமையைக் கண்காணிப்பது மற்றும் ஆய்வு மேற்கொள்வது அவசியம். எனவே இந்த குடியரசு தின (ஜனவரி 26) விழாவுக்கு தன்னால் வர இயலாது என்று பிரதமர் மோடியிடம், போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடினார்.
குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்வதற்கு இந்தியா விடுத்த அழைப்பிற்கு நன்றி தெரிவித்த இங்கிலாந்து பிரதமர், அங்கு மாறியுள்ள கொரோனா பரவல் சூழல் காரணமாகக் குடியரசு தின விழாவில் தம்மால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தம்மால் புரிந்து கொள்ள முடிவதாகக் கூறிய பிரதமர் மோடி, பெருந்தொற்றின் பரவலை விரைவில் கட்டுப்படுத்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். நிலைமை சீரடைந்தவுடன், பிரதமர் ஜான்சனை இந்தியாவுக்கு வரவேற்க ஆவலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பூசிகளை உலகத்துக்குக் கிடைக்கச் செய்வது உட்பட இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் பேசினர். கொரோனாவுக்கு பிறகு இரு நாடுகளுக்கிடையேயான நட்பு மற்றும் குறிக்கோள்களை அடைவதற்காக விரிவான முறையில் இணைந்து பணிபுரிவது குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**பிரியா**�,