கொரோனா பரவல் காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும் திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் நேரங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் கூட்டங்கள் நிறுத்திவைக்கப்படுவது கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது. அதன்படி கொரோனா உச்சத்தில் இருந்தபோது மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்பு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் தங்களின் வளாகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்களை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
தற்போது, தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று(ஜனவரி 8)தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன.
மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் உட்பட அனைத்து குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,