கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஒமிக்ரான் தொற்று பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு திட்டங்களுடன் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. அதன்படி தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத் துறை அறிவித்தது.
இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொது இடங்களில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மதுரை, விருதுநகர், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு, பொது இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி நாளை (டிசம்பர் 13) முதல் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியவர்கள் மட்டுமே மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணத்தை சமர்ப்பித்தால் மட்டுமே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். கோவிட் தடுப்பூசி சான்றிதழ் நகல், கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ், கைபேசியில் உள்ள குறுஞ்செய்தி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,