ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலத்தில் தனது வீட்டுக்குள் மழை நீர் புகுந்து விடுவதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடையை சரியாக தூர்வாருவது கிடையாது என்றும் கூறி 70 வயது முதியவர் மழை நீரில் நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் செய்துள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மும்பையில் கடந்த சனிக்கிழமையில் இருந்து விடாது கனமழை பெய்த மழை நேற்று (ஜூலை 20) தான் சற்று ஓய்ந்துள்ளது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்து மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள். இந்த மழையின்போது இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் தானே பார்சி மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் மூன்று பேரை உள்ளூர் மக்கள் உயிரோடு மீட்டனர். தீயணைப்புத் துறையினர் போராடி இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்கள் உடலை மீட்டனர். அதோடு மீரா ரோட்டில் ஒன்பது வயது சிறுவன் திறந்த சாக்கடையில் விழுந்தான். அவன் உடல் இன்னும் மீட்கப்படவில்லை. இது தவிர தானே மற்றும் பால்கரில் மூன்று பேர் மழை நீரில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.
இதனால் மும்பை மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. நவிமும்பை பேலாப்பூரில் கார் ஒன்று மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. காரில் மூன்று பேர் இருந்தனர். அந்த காரை மழை நீர் அருகில் உள்ள ஏரிக்கு அருகில் இழுத்துச்சென்றது. மீட்புக்குழுவினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
இந்த நிலையில் வசாய் ரோட்டில் 70 வயது முதியவர் ஒருவர் மழை வெள்ளத்தில் நடுரோட்டில் அமர்ந்து நான்கு மணி நேரம் போராடியுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் மழைக் காலத்தில் தனது வீட்டுக்குள் மழை நீர் புகுந்து விடுவதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடையை சரியாக தூர்வாருவது கிடையாது என்றும் கூறி அசோக் என்ற முதியவர் மழை நீரில் நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் செய்தது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அசோக், “2017ஆம் ஆண்டில் இருந்து மழை நீர் எனது வீட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. 2017ஆம் ஆண்டில் வீட்டுக்குள் மழை நீர் புகுந்ததால் எனக்கு 1.50 லட்சம் செலவானது. மழை நீர் வடிய நான்கு நாள்கள் பிடித்தது. இப்போது நான்கு மணி நேரம் போராடியும் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வந்து என்னவென்று கேட்கவில்லை” என்கிறார் விரக்தியாக.
இதற்கிடையே மும்பையில் மழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு ஆளும் சிவசேனா நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப், “ஒவ்வோர் ஆண்டும் மழை நீர் விரைவாக வெளியேற சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மாநகராட்சி கூறுகிறது. ஆனால் அதனை நிறைவேற்ற தவறி விடுகிறது. சாக்கடைகளை தூர் வார பல நூறு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால் 25 சதவிகிதப் பணிகள்கூட முடியவில்லை. பணிகள் முடியவில்லையெனில் பணம் எங்கு போனது. நிச்சயம் மாநகராட்சியின் அனைத்து மட்டத்திலும் ஊழல் நடந்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
.
�,