டிசம்பர் வரை பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு, வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வழி கல்வியை ஊக்குவிப்பதாக மத்திய அரசு அறிவித்து, அதற்கான வழிகாட்டு முறைகளையும் வெளியிட்டுள்ளது. பல மாநில அரசுகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன.
ஊரடங்கில் தொடர்ச்சியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது எப்போது என்ற கேள்விகளும் எழுந்தன. வரும் செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று (ஆகஸ்ட் 11) மனிதவள மேம்பாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
அப்போது பேசிய மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே, “கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகளைத் திறப்பதற்கான வாய்ப்பு குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும் ஜீரோ அகாடமிக் வருடம் என அறிவிக்கப்படாது” என்று நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம் விளக்கியுள்ளார். ஆன்லைன், சமூக ரேடியோ மூலமாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பள்ளி வகுப்புகளைத் தொடர முடிவு செய்யப்பட்ட தகவலையும் தெரிவித்தார்.
எனினும், கல்லூரி இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படுமெனவும், கல்லூரி வகுப்புகள் தொடங்குவது தாமதமாகலாம் என்ற தகவலையும் அமித் காரே கூறியுள்ளார். இந்த வருடம் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச்சில் பாதி என வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளி, கல்லூரிகள் செயல்பட்ட நிலையில் ஒன்பது மாதங்கள் மாணவர்கள் வீட்டிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
**எழில்**�,