முழு ஊதியம் தராத நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது : உச்ச நீதிமன்றம்!

Published On:

| By Balaji

�ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்காத தனியார் நிறுவனங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஊரடங்கு காலத்தில் தனியார் நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம், 2005 தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி அறிவித்திருந்தது. கடந்த மார்ச் 29ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பைத் எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று, ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு ஊதியம் தர முடியாத தனியார் நிறுவனங்களின் மீது ஜூலை மாதம் இறுதிவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் பேசி ஊதியம் வழங்குவது தொடர்பான முடிவை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான வசதிகளை மாநில அரசுகள் உருவாக்கி கொடுக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையை மாநில அரசுகள் தொழிலாளர் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மார்ச் 29ஆம் தேதி வெளியிடப்பட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு குறித்து அடுத்த நான்கு வாரங்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை இறுதி வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் .

**-பவித்ரா குமரேசன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share