சிங்கங்கள் தவிர வேறு விலங்குகளுக்கு தொற்று இல்லை: அமைச்சர்!

Published On:

| By Balaji

சிங்கங்களை தவிர வேறு எந்த விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக தகவல் இல்லை என வனத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பருவமழை பாதிப்புகளை தடுப்பது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் வனத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் நேற்று(ஜூன் 18) நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜனார்த்தன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராமசந்திரன், “நீலகிரியில் இதுவரை 2 லட்சத்து 26 ஆயிரத்து 822 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் முன்பு இருந்த நிலை தற்போது இல்லை. அந்தவகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

சிங்கங்களை தவிர வேறு எந்த வன விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இல்லை. மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்களை இரண்டு மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து உணவுகளில் கொரோனா தடுப்பு மருந்துகள் வைத்து வழங்கபட்டு வருகிறது.

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்கும் விதமாக தோண்டபட்டுள்ள அகழிகளின் மேற்பரப்பில் கான்கிரீட் தடுப்பு அமைக்கவும், சோலார் மின்வேலி அமைக்கவும் நிபுணர்களுடன் ஆலோசிக்கபட்டு வருகிறது. நிபுணர்களின் பரிந்துரைபடி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்து உள்ளவர்களின் பட்டியல்களை சேகரித்து, அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, மாவட்டத் தில் 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றது. 2,529 முதன்மை தொடர்பாளர்களைக் கொண்டு, தாழ்வான பகுதிகள், நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் மற்றும் மழைவெள்ளத்தினால் பாதிக்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து வன விலங்குகளை பாதுகாக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share