இஸ்லாமியர் மனம் புண்படும்படி பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இடைத் தேர்தல் பணிக்காக நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரிடம் மனு கொடுப்பதற்காகச் சென்ற இஸ்லாமியர்கள் மனம் புண்பட்டுத் திரும்பியுள்ளனர் என்று, [முஸ்லிம்களுக்கு எதுக்கு செஞ்சு தரணும்?: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி](https://minnambalam.com/k/2019/10/17/100/minister-rajendrabalaji-denied-to-receive-petition-from-muslims) என்னும் தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், “இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கேசவனேரி பகுதியின் ஜமாத் தலைவர் முகமது ஷெரிப் என்கிற ஃபைசல், “ரேஷன் கடை அமைப்பது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் மனு அளிக்க அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றிருந்தோம். அப்போது அமைச்சர் எங்களைப் பார்த்து எடுத்த எடுப்பிலேயே, ‘முஸ்லிம்ங்கதான் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீங்களே… அப்புறம் நாங்க ஏன் உங்களுக்குப் பண்ணித் தரணும்? போங்க, மனுவைக் கொண்டுட்டு திரவியத்துட்ட (திமுக எம்.பி) போய் கொடுங்க.
இப்படியே நீங்க எங்களைப் புறக்கணிச்சீங்கன்னா, ஜம்மு காஷ்மீர்ல உங்கள ஒதுக்கிவச்ச மாதிரி இங்கயும் ஒதுக்கிவக்க வேண்டியிருக்கும். வெறும் 5% இருக்குற உங்களால என்ன செய்ய முடியும்?’ என்று அமைச்சர் சொல்லச் சொல்ல நாங்கள் அதிர்ந்து போய்விட்டோம்” என்று சொன்னதாகக் கூறியிருந்தோம்.
நேற்று மதியம் 1 மணிப் பதிப்பில் வெளியிடப்பட்ட இந்த செய்தி முகநூலில் அதிகளவில் பகிரப்பட்டது. அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்துகள் பகிரப்பட்டன. இந்த நிலையில் நமது செய்தியைக் குறிப்பிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரத்துக்குச் சென்றுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கேசவனேரி என்ற பகுதியில் தன்னிடம் மனுக் கொடுக்க வந்த மக்களிடம் அவர்களின் மதத்தைக் குறிப்பிட்டு, மனம் நோகும் விதமாக பேசியிருப்பதாக மின்னம்பலம் இணைய இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும், காஷ்மீரில் செய்திருப்பதைப் போல, தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களை ஒடுக்குவோம் என்றும் அவர் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “அரசமைப்பு சட்டத்தின் பேரில் உறுதியெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள், அனைவருக்குமாகச் செயல்பட வேண்டும். முஸ்லிம்/இந்து எனக் குடிமக்களைப் பிரித்துப் பேசுவது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல; உள்நோக்கமுடையதும் ஆகும். மேற்சொன்ன செய்தி உண்மையென்றால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சரவையில் தொடர தகுதி இழந்துவிட்டார். தமிழக முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு அமைச்சர் மீது விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இந்திய தவ்ஹித் ஜமாத் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சிறுபான்மை மக்களுக்கு எதிரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பொறுப்பற்ற பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. அறிவற்ற வகையில் தொடர்ந்து பேசிவரும் அவர் மீது முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.�,