நீதிபதிகளுக்கு கொரோனா: உயர் நீதிமன்றம் மூடப்பட்டது!

Published On:

| By Balaji

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது. வழக்குகளை வீடியோ கான்பிரன்சிங் மூலமாகவே விசாரிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 டிவிஷன் பெஞ்ச்சுகள், ஒரு நீதிபதி கொண்ட 5 அமர்வுகள் என மொத்தம் ஏழு அமர்வுகள் செயல்பட்டு வந்தன. இவற்றில் அவசர வழக்குகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. சுமார் இரு மாதத்துக்குப் பின் ஜூன் 1 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் குறைந்தபட்ச பணியாளர்களோடு திறக்கப்பட்டது.

ஜூன் 1 ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரியில் நீதிமன்றங்கள் இன்னும் திறக்கப்படாததால் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, பொது மக்களும் பாதிக்கப்படுவதாக விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து முறையிடுவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், “காணொலிக் காட்சி முறையில் (வீடியோ கான்ஃபிரன்சிங்) வழக்கு விசாரணை என்பது வழக்கறிஞர்களுக்கு சிரமமாக இருக்கிறது. இது வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் பாதிப்பாகத்தான் இருக்கும். இந்த முறை தோல்வியடைந்துவிட்டது. அதனால்தான் மதுரையில் எப்படி உயர் நீதிமன்றம் திறக்கப்பட்டதோ, ஒன்பது மாவட்டங்களில் எப்படி நீதிமன்றங்கள் திறக்கப்பட்டதோ அதேபோல தமிழக முழுதும் நீதிமன்றங்கள் திறக்கப்பட வேண்டும்” என்று தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் ஏழு அமர்வுகளுடன் இயங்கிய உயர் நீதிமன்றம் ஜூன் 1 ஆம் தேதி முதல் 33 அமர்வுகளோடு செயல்படத் தொடங்கியது. ஒரு வாரத்துக்குள் சென்னை உயர் நீதிமன்ற துணைப் பதிவாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் அடுத்தடுத்து நான்கு பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் உயர் நீதிமன்ற நீதிபதிகளில் சிலருக்கும் தொற்று இருப்பதாக ஓரிரு நாட்களாக செய்திகள் வந்தன.

சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழகத்தில், குறிப்பாக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் நிலவும் நிலை குறித்து அரசு வெளியிடும் அறிக்கைகள், பத்திரிகைகளில் வரும் செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது கொரோனா வைரஸ் தொற்று விரைவாக பரவுவது தெரிகிறது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி மேற்கொள்ளும் முறையை மறுஆய்வு செய்ய வேண்டியது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதன் முடிவாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் கொண்ட இரு டிவிசன் பெஞ்சுகள், ஒரு நீதிபதி கொண்ட 4 அமர்வுகள் என்று மொத்தம் 6 அமர்வுகள் அவசர வழக்குகளை காணொலி காட்சி மூலம் விசாரிக்கும். மதுரை கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட ஒரு டிவிஷன் பெஞ்ச், ஒரு நீதிபதி கொண்ட 3 அமர்வுகள் என்று மொத்தம் 4 அமர்வுகள் அவசர வழக்குகளை காணொலி காட்சி வாயிலாக விசாரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவது ஜூன் 30 வரை தடைசெய்யப்பட்டுள்ளது.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share