இலங்கை தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையே சுமார் 30 கிலோமீட்டர் தூரம் உள்ள கடல் பகுதியை நீந்துவதற்காக ஐதராபாத்தைச் சேர்ந்த 48 வயது சியாமளா கோலி என்ற பெண்மணி ராமேஸ்வரம் வந்துள்ளார்.
இன்று (மார்ச் 18) காலை 10 மணி அளவில் இவர் ராமேஸ்வரத்திலிருந்து ஒரு விசைப்படகில் இலங்கை தலைமன்னார் புறப்பட்டு செல்ல உள்ளார். இரவு முழுவதும் படகிலேயே தங்கியிருக்கும் இவர் நாளை (19ஆம் தேதி வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து தனது நீச்சல் பயணத்தைத் தொடங்க உள்ளார். மாலை 4 மணிக்குள் அவர் தனுஷ்கோடி கரையை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி பேசியுள்ள சியாமளா, “எனது நீச்சல் பயிற்சியாளர் காவல்துறை உயரதிகாரி ராஜீவ் திரிவேதி. கிருஷ்ணா நதியில் ஒன்றரை கிலோமீட்டர் தூரமும், கங்கை நதியில் 13 கிலோமீட்டர் தூரமும், கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி நதியில் 14 கிலோமீட்டர் தூரமும் நீந்தி உள்ளேன். 2019இல் போர்பந்தரில் 10 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோமீட்டர் நீச்சல் போட்டியில் வெற்றிபெற்று தங்கப்பதக்கமும் பெற்றுள்ளேன். ராம சேது கடலில் நீந்துவது எனது கனவு மற்றும் லட்சியம்” என்று கூறியுள்ளார்.
மேலும், “இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி வருவதற்கு இந்திய – இலங்கை அரசிடம் முறையான அனுமதி பெற்றுள்ளேன். இதுவரை தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே பலர் நீந்தி வந்து சாதனை புரிந்துள்ளனர். இருந்தாலும் ஒரு பெண் இந்த சாதனைக்கு முயற்சி செய்வது இதுதான் முதல் முறை” என்று பெருமிதத்துடன் கூறினார்.
**-ராஜ்**
.
�,”