இந்து பிரமுகர் கொலை: அரசு மீது குற்றம் சாட்டும் தாய்!

Published On:

| By Balaji

உத்திரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வந்த ஹிந்து சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் அகில பாரத இந்து மகா சபா பிரமுகருமான கமலேஷ் திவாரி கொல்லப்பட்ட சம்பவம் வட இந்தியா முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் குஜராத் போலீஸ் மூன்று பேரை கைது செய்திருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில், உபி போலீஸ் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக சொல்லியிருக்கிறது.

அக்டோபர் 18 ஆம் தேதி வெள்ளிக் கிழமை பிற்பகல் உபி தலைநகர் லக்னோவில் இருக்கும் அவரது வீட்டில் இருந்த திவாரியை மர்மநபர்கள் கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வர இருக்கும் நிலையில் அயோத்தி முதன்மை வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இந்துமகா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தவர் இந்த கமலேஷ் திவாரி என்பதால் இவரது கொலை வட இந்தியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அக்டோபர் 18 ஆம் தேதி பிற்பகல் லக்னோ குர்ஷித் பாக் பகுதியில் இருக்கும் அவரது அலுவலகத்துக்கு காவி உடை அணிந்து இருவர் சென்றிருக்கின்றனர். அவர்கள்தான் திவாரியை கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்திருக்கிறார்கள். அலுவலகத்துக்கு கீழேதான் அவரது வீடு அமைந்திருக்கிறது. வீட்டில் அவரது மூன்று மகன்களும் இல்லாத நிலையில் இந்த கொலை நடந்திருக்கிறது.

உபி மாநில அரசின் போலீஸ், தீவிரவாத எதிர்ப்புப் படை ஆகிய அமைப்புகள் இந்த கொலை வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

“கொலை நடந்தபிறகு கொலையாளிகள் பரேலிக்கு தப்பிச் சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் வேறு எங்கோ சென்றுவிட்டார்கள்” என்கிறது உபி போலீஸ்.

திவாரி வீட்டுக்குச் சென்ற அவர்கள் கையில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அதற்குள்தான் கத்தியையும், துப்பாக்கியையும் மறைத்து எடுத்து வந்திருக்கிறார்கள். அந்த ஸ்வீட் பாக்ஸில் குஜராத் மாநிலம் சூரத்தில் இருக்கும் கடையின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் கொலையாளிகள் குஜராத்தில் இருந்து வந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. குஜாராத், மகாராஷ்டிர போலீசாரும் இந்த கொலை தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

கொல்லப்பட்ட கமலேஷ் திவாரி 2015 ஆம் ஆண்டு முகமது நபியை பற்றி அவதூறாகப் பேசியதற்காக அவரது தலையை வெட்டிக் கொண்டுவருபவர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் பரிசு என்று இஸ்லாமிய இமாம்கள் அறிவித்தார்கள். அந்த அளவுக்கு சர்ச்சைக்குள்ளான நபர் கமலேஷ் திவாரி.

இந்தப் பின்னணியில் இக்கொலையில் பங்கேற்றதாக ஃபைசன் யூனுஸ் பாய், மௌலனா மொஹ்சின் ஷேக், ரஷீத் அகமது ஆகியோரை குஜராத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருக்கிறார்கள். மகாராஷ்டிர போலீஸாரும் நாக்பூரில் கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வெறிச்செயல் என்று உபி மாநில பாஜகவினர் குறிப்பிட்டு இதை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் நிலையில், கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக அவருடைய அம்மா குஷ்மா அதிர்ச்சிகரமான ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார்.

“என்னுடைய மகன் கமலேஷ் திவாரி கொலைக்குக் காரணம் யோகி ஆதித்யநாத் அரசுதான். போன முறை இருந்த அகிலேஷ் யாதவ் ஆட்சியில் என் மகனுக்கு 17 போலீஸார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் யோகி ஆட்சிக்கு வந்த உடனே பாதுகாப்புப் போலீசாரை படிப்படியாகக் குறைத்து என் மகனுக்கு கடைசியில் 4 போலீசாரே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களும் கையில் ஒரு பிரம்புமட்டும்தான் வைத்திருப்பார்கள். நான்கு போலீஸாராக குறைக்கப்பட்ட பாதுகாப்பும் கொலை நடந்த அன்று என் மகனுக்கு இல்லை.

என்ன காரணத்தாலோ என் மகனுக்கு அன்று நான்கு போலீஸ்காரர்களுமே பாதுகாப்பு கொடுக்க வரவில்லை. இது ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் எழுப்புகிறது. என் மகனின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பல முறை மாநில அரசிடம் மனு கொடுத்தேன். ஆனால் மாநில பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை. கிராமத்தில் இருக்கும் கோவில்நிலம் தொடர்பாக ஒரு லோக்கல் பாஜக பிரமுகருக்கும் எனது மகனுக்கும் பகை இருந்தது. இதுபற்றியெல்லாம் விசாரிக்க மாட்டார்கள். நான் சொல்வதை யாரும் கேட்கமாட்டார்கள்” என்று கதறுகிறார் அந்தத் தாய்.

கமலேஷ் திவாரியைக் கொன்றது முஸ்லிம் பயங்கரவாதிகள் என்று உபி, குஜராத், மகாராஷ்டிர மாநில போலீஸார் சொல்லிக் கொண்டிருக்க, ‘மாநில முதல்வர் யோகி தலைமையிலான பாஜக அரசுதான் காரணம்’ என்கிறார் கமலேஷின் தாய்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share