Uஇனி காபி கப்பையும் சாப்பிடலாம்!

Published On:

| By Balaji

பிளாஸ்டிக் கழிவுகளால் மனித உயிர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதை அடுத்து அதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் முயன்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் வகைகளுக்கு மத்திய அரசு தடை விதிப்பதாக அறிவித்திருந்தது. கடந்த ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் உணவகங்கள் வாழை இலைக்கு மாறி வருகின்றன. தேநீர் கடைகள் சில்வர் டம்ளர் மற்றும் கண்ணாடி டம்ளர்களில் டீ. காபி விநியோகித்து வருகின்றன. எனினும், டீ, காபி, ஜூஸ் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகள் குறைந்தபாடில்லை. பிளாஸ்டிக் கப்புகளால் குடிப்பதனால் உடலுக்குத் தீங்கும் ஏற்படுகிறது.

இந்தநிலையில் டீ, காப்பியை குடித்த பிறகு கப்பையும் சாப்பிடும் வகையில் ‘ஈட் கப்’-ஐ ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜினோம்லேப் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த கப் முற்றிலும் தானிய வகைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சூடான பானங்கள், குளிர்ந்த பானங்கள் இரண்டையும் ஊற்றிக் குடிக்கலாம். சுமார் 40 நிமிடம் வரை இது நமத்துபோகாமல் இருக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழுக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த ஈட் கப்-ஐ தயாரித்துள்ளதாக ஜினோம்லேப் நிறுவனம் தெரிவித்துள்ளது, நிறுவனத்தின் மூத்த அதிகாரி சுரேஷ் ராஜு கூறுகையில், “ஈட் கப் இயற்கை தானிய பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இது முற்றிலும் உண்ணக்கூடியது, முறுமுறுப்பானது மற்றும் சுவையாக இருக்கும். நார்ச்சத்து நிறைந்தது. இது ஒரு நல்ல உணவு நிரப்பியாகும். பானத்தைக் குடித்த பிறகு கப்பையும் சாப்பிடலாம்” என்று தெரிவித்துள்ளார்.

”ஈட் கப்பில் எந்தவிதமான செயற்கையான வண்ணங்களும், செயற்கையான பொருட்களும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு வரும் ஆபத்துக்கள், மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும், பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கவும் இந்த ஈட் கப் உதவியாக இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஈட் கப் தற்போது ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஜினோம்லேப்பின் கூட்டுத் தயாரிப்பு நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது. அடுத்த 9 முதல் 10 மாதங்களுக்குள் ஷாமிர்பேட்டையில் 9 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைத்து ஈட் கப் தயாரிக்கும் பணி தொடங்கப்படவுள்ளதாக இந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share