நேற்று முழு ஊரடங்கைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 26) முதல் ஹோட்டல்களில் பார்சல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்து இருப்பதால் 90 சதவிகிதத் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாத நிலையில் 40 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, அம்மா உணவகங்களில் சாப்பிடுவதற்கு அனுமதி அளித்திருப்பது போல ஹோட்டல்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சாப்பிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஹோட்டல் உரிமையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது
தமிழகத்தின் ஊரடங்கில் இன்று (ஏப்ரல் 26) முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை என்றும் பார்சல்களுக்கு மட்டுமே இன்று முதல் அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஹோட்டல் தொழிலில் மீண்டும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக நேற்று (ஏப்ரல் 25) ஹோட்டல்களை யாரும் திறக்கவில்லை. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் ஹோட்டல்கள் செயல்படுகின்றன. இதை நம்பி 40 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இன்று முதல் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்திருப்பதால் 90 சதவிகிதத் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாத நிலை ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குறைந்த தொழிலாளர்களை வைத்து பார்சல்களை மட்டும் வழங்க இருப்பதால் லாபத்தில் ஹோட்டலை நடத்த முடியாத நிலையும் உள்ளது.
இதற்கு முன் ஹோட்டல்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து உடல் வெப்பநிலையைக் கண்டறிந்த பிறகு சாப்பிடுவதற்கு அனுமதித்து வந்தோம். இதன் மூலம் பொதுமக்களுக்கு சூடான உணவு கிடைத்தது. பார்சல்கள் மூலம் இப்போது உணவுப் பொருட்களை வழங்குவதால் பல கைகள் மாறி வாடிக்கையாளர்களிடம் உணவு போய் சேரும்போது ஆறிப்போகும் சூழல் உள்ளது. இதனால் கொரோனா பரவும் ஆபத்தும் இருக்கிறது.
முழு ஊரடங்கின்போது அம்மா உணவகங்களைத் திறந்துவைத்து சாப்பிடுவதற்கு அனுமதி அளித்திருப்பதுபோல ஹோட்டல்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சாப்பிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
கொரோனா ஊரடங்கால் ஹோட்டல்கள் ஏற்கனவே கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் அதிலிருந்து பலர் இன்னும் மீளாமலேயே உள்ளனர். இது போன்ற சூழலில் பார்சல்கள் மட்டுமே வழங்கி ஹோட்டல்களை நிச்சயமாக நடத்த முடியாது” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
.�,