தங்கம் விலை கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து குறைந்து வருவது இல்லதரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.43 ஆயிரமாக இருந்தது. தங்கத்தின் விலை உயர்வால், இனிமேல் தங்கத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்ற எண்ணத்தில் இருந்த மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் ஒரு சவரன் ரூ.33 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. மே மாதம் ரூ.37ஆயிரமாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, ஊரடங்கு நாட்களில் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றமும், இறக்கமும் இருந்து வந்தது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும், சற்று குறைந்தும் வந்தது.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளது.
கடந்த 15ஆம் தேதி ஒரு சவரன் ரூ.36,680க்கு விற்கப்பட்டது. 16ஆம் தேதி சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.36,616க்கு விற்கப்பட்டது. 17ஆம் தேதி சவரனுக்கு ரூ. 616 குறைந்து ஒரு சவரன் 36,000க்கு விற்கப்பட்டது. நேற்று(ஜூன் 18) சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் 35,680க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும்(ஜூன் 19) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.35,440க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,100க்கும் விற்பனையாகிறது.
பெரிய முதலீட்டாளர்கள் பார்வை மற்ற துறை பக்கம் திரும்பும்போது, தங்கத்தின் விலை குறையும் என தங்க வியாபாரிகள் கூறுகின்றனர்.
தங்கம் விலை குறைந்ததோடு நகை எடுக்க வேண்டுமென்று மக்கள் நினைக்கின்ற காலத்தில் ஊரடங்கு காரணமாக நகை கடைகள் மூடப்பட்டுள்ளன. இது மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. இருப்பினும், ஊரடங்கு தளர்வு குறித்து இன்று முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். அதில் எப்படியும் போக்குவரத்து, ஐவுளி மற்றும் நகை கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இல்லதரசிகள் காத்திருக்கின்றனர்.
**-வினிதா**
�,