தர்மபுரியில், நிலத்தை அளந்து தராத அதிகாரிகளை கண்டித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரியில் அரூர் அருகே மாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கு சொந்தமாக எட்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரின் நிலத்துக்கு அருகிலேயே இவரது உறவினர்களின் நிலமும் உள்ளதால், இருவருக்கும் நிலப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால், தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து தருமாறு நில அளவை பிரிவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் கட்டியுள்ளார் சங்கர். ஆனால், நில அளவீடு அதிகாரிகள் அவரது நிலத்தை அளக்க வராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிட்டபோது, இன்று, நாளை என்று சாக்குபோக்கு சொல்லி வந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது. அங்கேயும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், விரக்தியடைந்த சங்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க தனது குடும்பத்துடன் சென்றார். தன்னுடைய நிலத்திற்கு செல்ல முடியாமல் தவிப்பதாகவும், தங்களுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து தராத அலுவலர்களை கண்டித்தும், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளனர். அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். இருப்பினும், ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், நில அளவை பாதுகாப்புடன் செய்யப்படும் என உறுதியளித்த பிறகு, சங்கர் குடும்பத்தினர் அங்கிருந்து சென்றனர்.
**வினிதா**
�,