அயர்லாந்தைச் சேர்ந்த முதியவரின் இறுதிச்சடங்கின் போது குழிக்குள்ளிருந்து ஒலித்த அவரது குரல் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
பொதுவாக மரண வீடுகளில் கவலையும் அழுகையுமே நிறைந்து நிற்கும். இறுதிச் சடங்குகளில் அஞ்சலி செலுத்தும் போதும் உறவினர்கள் அனைவரும் அமைதியாகவே இருப்பார்கள். வாழ்நாள் முழுதும் சிரிக்க வைத்த காமெடியனின் மரணம் கூட அனைவரையும் அழத்தான் வைக்கும்.
ஆனால், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தன் மரணத்திலும் அனைவரும் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று விரும்பினார். அதை தனது இறுதி ஆசையாகக் கூறி அதை நிறைவேற்றியும் உள்ளார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஷே பிராட்லி (Shay Bradley). இவர் தனது வாழ்நாள் முழுவதும் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தார்.
மிகவும் ஜாலியான மனிதராக இருந்த இவர் வயதின் முதிர்ச்சி மற்றும் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக கடந்த சனிக்கிழமை(அக்டோபர் 12) மரணமடைந்தார். அவர் மரணமடையும் முன்னர் தனது மகளிடம் “நான் இறந்த பிறகும் யாரும் அமைதியாக இருக்கவோ அழவோ கூடாது. என் இறுதிச்சடங்கின் போது அனைவரும் வாய்விட்டு சிரிக்க வேண்டும். இது தான் என் கடைசி ஆசை” என்று கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி தனது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவரும் உறவினர்களை சிரிக்க வைக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உயிருடன் இருக்கும் போதே செய்துள்ளார். தனது இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு ஒரு ஆடியோ டேப்பை தனது மகளிடம் கொடுத்து “நான் இறந்து எனது உடலைக் குழியில் வைக்கும் போது இந்த ஆடியோவை ஒலிக்கச் செய்யுங்கள்” என்று கேட்டுள்ளார்.
Funeral in dublin yesterday he’s alive pic.twitter.com/j18uFJ5aA4
— Lfcgigiddy1122 (@lfcgigiddy1122) October 13, 2019
அதன்படியே ஷே இறந்த பிறகு அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது உடல் குழிக்குள் வைக்கப்பட்டு ஆடியோ ஒலிக்கப்பட்டது. உறவினர்கள் அனைவரும் கூடி நிற்க ஒலிக்கப்பட்ட அந்த ஆடியோவில் ‘ஹலோ…ஹலோ’ என்றவாறு பெட்டியை வேகமாகத் தட்டுவது போன்ற குரல் கேட்கிறது. அதனைத் தொடர்ந்து “நான் எங்கே இருக்கிறேன்? இங்கே இருந்து என்னை வெளியே எடுங்கள், நான் பெட்டிக்குள் இருக்கிறேன்” என்றவாறு மிகவும் நகைச்சுவையூட்டும் விதமாக ஷே பேசியுள்ள குரல் ஒலிக்கிறது.
அதுமட்டுமின்றி தான் விடைபெறுவதாக போலியாக அழுவது போன்று நகைப்பூட்டும் விதமாகப் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். இதனைக் கேட்டு நின்ற அனைத்து உறவினர்களும் வாய்விட்டு சிரிக்கத் தொடங்கி விட்டனர். அதற்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தனது மரணத்திலும் அனைவரையும் சிரிக்க வைத்த ஷேவின் ஆடியோ மற்றும் அதைக் கேட்டு சிரிக்கும் உறவினர்களின் வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டது. இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
�,”