தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவுடிகள் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் அமர்வு, “ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது. தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்க சென்ற போது உயிரிழந்த போலீஸ் சுப்பிரமணியன் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்படுவோர் குடும்பத்திற்கு அரசியல் கட்சிகள் உதவ வேண்டும்” என அறிவுறுத்தியிருந்தது
ரவுடிகள் இறக்க நேரிடும் போது காட்டப்படும் அக்கறையை போலீசார் மீது மனித உரிமை ஆணையம் ஏன் காட்டுவதில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். ரவுடிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டி.ஜி.பி 2 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று (அக்டோபர் 1) நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்ற தகவலைத் தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் புதிய சட்ட வரைவு மசோதா எப்போது சட்டமன்றத்தில் முன் வைக்கப்பட உள்ளது என்று பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
**அரசன்**�,