பொருளாதாரத்தை மீட்டெடுப்பது எப்படி? ரங்கராஜன் குழு ஆலோசனை! ’

Published On:

| By Balaji

ஊரடங்கு நீடிக்கும் நாட்களைப் பொறுத்தே பொருளாதார பாதிப்புகள் குறித்து சொல்ல முடியும் என பொருளாதார ஆய்வுக் குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்குக்குப் பிறகான தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்துவதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும், முன்னாள் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவருமான சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழக முதல்வர் எடப்பாடி கடந்த மே 9 ஆம் தேதி அமைத்தார்.

தமிழகத்தின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுவருவதற்கும், ஏழைகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கை நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்யும்.

இந்த நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் சி.ரங்கராஜன் தலைமையில் இன்று (மே 14) பொருளாதார உயர்மட்டக் குழு கூடியது. அதில் குழுவின் அங்கம் வகிக்கும் தொழிலதிபர்கள் உள்பட 23 பேரும் கலந்துகொண்டனர். இந்த முதல் கூட்டத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது எப்படி என்பது குறித்த ஆலோசனைகள் பெறப்பட்டன.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சி.ரங்கராஜன், “மூன்று மாதத்திற்குள் நாங்கள் அறிக்கை சமர்பிக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் எங்கள் குழுவானது இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கும். பொருளாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது, அதனை சரிசெய்ய உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், 2-3 ஆண்டுகளில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன, பொருளாதார சீர்திருத்தங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கவே நாங்கள் கூடியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

மேலும், “ஊரடங்கு எவ்வளவு நாட்கள் நீடிக்கிறது என்பதைப் பொறுத்துதான் எந்த அளவு பாதிப்பு இருக்கும், அதிலிருந்து எவ்வளவு சீக்கிரம் விடுபட முடியும் என்பதை சொல்ல முடியும். ஒவ்வொரு துறைக்கு துணை பொருளாதார குழுக்கள் அமைக்கப்பட்டு பொருளாதார மேம்பாடு தொடர்பான ஆய்வு முடுக்கிவிடப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார் ரங்கராஜன்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel