வரும் 25ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு 56ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்த இரண்டு மாதங்களில் உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவை, ரயில் சேவை, சாலைப் போக்குவரத்து ஆகியவை முற்றிலும் முடக்கப்பட்டன. விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு, கட்டணத்தை திருப்பி அளிக்கவும் விமான சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
நான்காவது ஊரடங்கு தொடங்கியபோது, பல்வேறு நடவடிக்கைகளுக்கு தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு விமானம், ரயில்களை இயக்குவதற்கான தடையை நீட்டித்தது.
இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று (மே 20) தனது ட்விட்டர் பக்கத்தில், “மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துவங்கப்படும். இதற்காக அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான சேவை நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக விமான சேவை முழு அளவில் விரிவுபடுத்தப்படும். நிலையான விமான இயக்க நடைமுறைகள் குறித்து பயணிகளுக்கு தனி அறிவிப்பாக வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Domestic civil aviation operations will recommence in a calibrated manner from Monday 25th May 2020.
All airports & air carriers are being informed to be ready for operations from 25th May.
SOPs for passenger movement are also being separately issued by @MoCA_GoI.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) May 20, 2020
ரயில்வே அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், நாடுமுழுவதும் தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் தவிர ஜூன் 1ஆம் தேதி முதல் 200 ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என்றும், ரயில்கள் குறித்த விவரமும் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
**எழில்**�,”