வேலைவாய்ப்பு தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்: ரயில்வே துறை!

Published On:

| By admin

ரயில்வே வேலைவாய்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தென்னக ரயில்வே தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பணிகளில் சேருவதற்கு ரயில்வே தேர்வு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு வாரியங்கள் மூலம் பல்வேறு பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டு முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதற்கிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக சொல்லி மோசடியில் ஈடுபடும் கும்பலின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலியான ரயில்வே வேலைவாய்ப்பு செய்தி குறித்த தகவல்கள் அதிக அளவில் வலம்வர தொடங்கியுள்ளன. அதில், பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை, நான்கு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது போன்ற தகவல்கள் இடம்பெறுகின்றன.
இதற்கிடையே, சமீபத்தில், ரயில்வே வாரியம் நடத்திய தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு, பிகார் மாநிலத்தில் கலவரம் வெடித்தது. இந்த நிலையில், ரயில்வே பணியில் சேர விரும்புபவர்கள் மோசடியாளர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தென்னக ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, ரயில்வே பணிகளில் சேர விரும்புபவர்கள் அதிகாரபூர்வமற்ற விளம்பரங்கள் மற்றும் இடைத்தரகர்களை நம்பி அதிக அளவில் பணம் கொடுத்து ஏமாறுவதாக ரயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.
ரயில்வே பணிகளில் சேர அதிகாரபூர்வமாக 21 ரயில்வே பணியாளர் தேர்வாணையங்கள் (ஆர்ஆர்பி) மற்றும் 16 ரயில்வே பணியாளர் தேர்வு முகமைகள் (ஆர்ஆர்சி) மூலம் மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது. இவற்றை தவிர வேறு எந்த நிறுவனமும் ஆட்களை தேர்வு செய்வதில்லை.
வேலைவாய்ப்புக்கான தேர்வுகள் குறித்து விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் ரயில்வே தேர்வாணையங்களின் இணையதளத்திலும் வெளியிடப்படுகின்றன.
சமூக ஊடகங்களில் வெளியாகும் ரயில்வே வேலைவாய்ப்பு செய்திகளை தேர்வாணைய இணையதளங்களில் சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், ரயில்வே பணியாளர் தேர்வுக்கு, தேர்வாணையங்கள் தனி முகவர்களையோ அல்லது பயிற்சி நிலையங்களையோ அனுமதிக்கவில்லை. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை நேரடியாக தேர்வாணைய இணையதளப் பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
எனவே, ரயில்வே பணியில் சேருவதற்காக இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாரேனும், ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி விண்ணப்பதாரர்களில் தொடர்பு கொண்டால் அருகில் உள்ள போலீஸ் நிலையம் அல்லது 044 23213185 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share