மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் உடல் வேலங்காடு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
திமுக பொதுச் செயலாளர், கலைஞரின் நெருங்கிய நண்பர் திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத மூத்த அரசியல்வாதி, அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என பன்முகத் தன்மை கொண்ட பேராசிரியர் க.அன்பழகன் வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த 24ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த பேராசிரியர் மார்ச் 7 நள்ளிரவு ஒரு மணியளவில் காலமானார்.
பின்னர் அவரது உடல் மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. காலை முதல் பலர் அவரது உடலுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், நடிகர் ரஜினிகாந்த், சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அதுபோன்று திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பேராசிரியர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் மாலை 4 மணிக்கு அவரது கீழ்பாக்கம் இல்லத்திலிருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. அவரது உடலில் கட்சிக் கொடி போர்த்தப்பட்டு, மலரால் உதய சூரியன் சின்னம் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வேலங்காடு மின் மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கே.என்.நேரு ஆகியோர் கலந்துகொண்டு நடந்தே சென்றனர். ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களும் பேராசிரியரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்,
மின்மயானத்தை அடைந்ததும் அங்கு வைத்து பேராசிரியருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக துரைமுருகன் மார்பில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.
இதன்பின்னர் 5.50 மணியளவில் பேராசிரியரின் உடல் தகனம் செய்யப்பட்டது. கட்சி நிர்வாகிகள் தொண்டர்களின் கண்ணீருக்கு மத்தியில் பிரியா விடைபெற்றார் பேராசிரியர் க.அன்பழகன்.
**-கவிபிரியா**�,”