இந்த ஆண்டும் தீபாவளிப் பண்டிகையன்று இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான தமிழக அரசின் அரசாணையில், “தீயணைப்பு ஊர்திகள், தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு நிலையங்களிலுள்ள அவசர கால மீட்பு உபகரணங்கள் எல்லாம் எந்த நேரமும் தயார்நிலையில் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீ விபத்து குறித்து அனைத்து ஊர்களிலும் விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன என்று தெரிவித்துள்ளது.
மேலும், பட்டாசு வெடிப்பதால் தீ விபத்துகள் ஏற்பட்டால் தகவல் தெரிவிப்பதற்கான உதவி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. (சென்னை மாநகருக்கான தீயணைப்புத் துறையின் தொடர்பு எண்கள் – 101, 28554309, 28554311, 28554313, 28554314, 28554316, 28554317 உதவி மாவட்ட அலுவலர்களின் கைப்பேசி எண்கள் – 94450 86081, 94450 86082, 94450 86083, 94450 86085) பிற ஊர்களுக்கு, அந்தந்த ஊர் காவல் நிலையத்தில் அழைத்துப் புகார் அளிக்கலாம் என்று அந்த அரசாணையில் சொல்லப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் பற்றி காவல்துறை அதிகாரி திருநாவுக்கரசர் நிருபர்களிடம் இன்று (அக்டோபர் 26) பேசுகையில், “தீபாவளிக்கான முன்னேற்பாடுகளை அரசு அறிவித்துள்ளபடி மேற்கொள்ள வேண்டும் என அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்தக் குறை இருந்தாலும் அவர்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அதிகாரியையோ அணுகலாம். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்பதில் அரசும் காவல் துறையும் உறுதியாக உள்ளது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பட்டாசு மாசு கணக்கிடுவது தொடர்பான பணிகளை மாநகராட்சியும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் மேற்கொள்ள நாங்கள் அவர்களுக்கு உதவி புரிவோம்” என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் ஷங்கர், “தீபாவளி சமயத்தில் உருவாகிற மாசு அளவை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடும். அவ்வாறு கணக்கிடுகையில், 2018ஆம் ஆண்டு காற்று மற்றும் ஒலி மாசு 25 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. பட்டாசு வெடிப்பதற்காகக் கட்டுப்பாடுகள் கொண்டுவந்ததற்குப் பிறகு, மக்கள் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த ஆண்டு மாசு மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கிறோம்” என்றார்.�,”