தர்மபுரி மாவட்டத்தில் 2022 – 2023ஆம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டார். இதன்படி ரூ.6,475 கோடி கடன் வழங்க வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம் தர்மபுரி ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் திவ்யதர்சினி தலைமை தாங்கி 2022-2023ஆம் ஆண்டில் தர்மபுரி மாவட்டத்துக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி, தர்மபுரி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ.6,475.09 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. இதன்படி வேளாண்மை, சிறு, குறு, நடுத்தர தொழில், கல்வி, ஏற்றுமதி, வீட்டு வசதி, மரபுசாரா எரிசக்தி, சமுதாய கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னுரிமை துறைகளுக்கு ரூ.6,475.09 கோடி கடன் வழங்க வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தில் நீண்ட கால கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்ட அறிக்கை விளக்குகிறது. இதுபோன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளைப் பெருக்கி, விவசாயத்தை ஒரு லாபகரமான, வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வங்கிகள் உதவும். வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையின் உதவியுடன் மாவட்டத்துக்கான வருடாந்திர கடன் திட்டம் தயாரிக்கப்படுகின்றது.
இந்தக் கடன் திட்ட அறிக்கை, பல அரசுத் துறைகள், வங்கிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் அரசின் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மதிப்பிடப்பட்ட கடன் திறன்களை உணர பின்பற்ற வேண்டிய யுக்திகள் இந்தத் திட்ட அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் தங்கள் இலக்குகளை அடைய திட்ட அறிக்கையைப் பயன்படுத்தி அதில் குறிப்பிட்டுள்ள அளவிற்கு கடன் உதவிகளை வழங்கி தர்மபுரி மாவட்டத்தை வளம் சார்ந்த மாவட்டமாக மாற்றிட முனைப்புடன் பணியாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
**-ராஜ்**
.�,