பெரம்பலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் பள்ளி மாணவிகள் 5 பேர் படுகாயம் அடைத்துள்ளனர். இதில் ஒரு மாணவி கவலைக்கிடமாக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பெரம்பலூரில் ஸ்ரீ தனலட்சுமி சீனிவாசன் என்ற தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியைச் சேர்ந்த மூன்று பேருந்துகள் குன்னம் அருகே சித்தளி கிராம பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது ஒரு பேருந்தை இன்னொரு பேருந்து முந்திக் கொண்டு வேகமாகச் சென்றுள்ளன. ஒரே கல்லூரியைச் சேர்ந்த கல்லூரி பேருந்துகள் போட்டி போட்டு முந்திக் கொண்டு சென்றதில், சாலை ஓரத்தில் இருந்த போஸ்ட் கம்பத்தில் மோதி ஒரு பேருந்து மட்டும் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை அருகே நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகள் மீது பேருந்து மோதியதில் 5 மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த 5 மாணவிகளும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு மாணவி கவலைக்கிடமாக இருப்பதால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாடலூர் சரக இன்ஸ்பெக்டர் சுகந்தி விசாரணை நடத்தியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே எஸ்.ஐ ராஜேந்திரன், சண்முகம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் பேருந்துகள் முந்திக் கொண்டு சென்று விபத்து ஏற்படுத்தியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவ்வழியே வந்த அனைத்து தனலட்சுமி கல்லூரியைச் சேர்ந்த பேருந்துகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். ஒரு பேருந்தை அருகில் இருந்த ஓடையில் தலை கீழாக தள்ளிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்து நேர்ந்த இடத்திற்குச் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினர் வந்து விளக்கம் கொடுத்தால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தைக் கைவிடுவோம் என அவர்கள் கூறியுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
�,”