சிதம்பரம் மீது குற்றப் பத்திரிகை: ஜாமீனை தடுத்த சிபிஐ!

Published On:

| By Balaji

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐயால் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.

இதற்கிடையே கடந்த 16ஆம் தேதி திகார் சிறையில் வைத்து அவரை அமலாக்கத் துறை கைது செய்தது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்திற்கு அக்டோபர் 24ஆம் வரை அமலாக்கத் துறை காவல் விதிக்கப்பட்டது. இதேபோல சிபிஐ வழக்கில் அக்டோபர் 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம், அவரது மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ நேற்று (அக்டோபர் 18) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை வரும் 21ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**ஜாமீனை தடுத்த சிபிஐ**

ஒருவர் கைது செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தானாகவே ஜாமீன் கிடைத்துவிடும். சிதம்பரம் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் ஆவதற்கு 2 நாட்களே எஞ்சியிருந்த நிலையில், நேற்று அவர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம் அவரது ஜாமீனையும் தடுத்துள்ளது.

இதற்கிடையே ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரம் தொடர்பான சிபிஐ வழக்கில் ஜாமீன் கேட்டு சிதம்பரம் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ஹிரிகேஷ் ராய் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

**சிபிஐ வாதம்**

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். “சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்தால் அவர் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது. இவ்வழக்கில் சாட்சிகள் தரப்பில் சிதம்பரம் தரப்பு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனை வழக்கின் சாட்சியாக உள்ளவரும், ஒப்புக் கொண்டுள்ளார். இருப்பினும் அவரது அடையாளத்தை வெளியிட நாங்கள் விரும்பவில்லை. சிபிஐ நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உரையில் அவருடைய பெயரை அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிராக ஊழலுக்கு நம் நாடு எந்தவித சமரசமும் இன்றி செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்ட துஷார் மேத்தா, “சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் மோசடி உள்ளிட்டவையும் அடங்கும்” என்றும் கூறினார்.

**சிதம்பரம் தரப்பு வாதம்**

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், “சிதம்பரத்தின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடு செல்வதற்கும் அவர் விண்ணப்பிக்காத நிலையில், எப்படி வெளிநாடு தப்பிச் செல்வார். அவர் எப்படி ஓட முடியும்? சிதம்பரத்திற்கு உலக நாடுகள் முழுவதும் மதிப்பு உள்ளது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “கைது செய்யப்பட்ட பிறகு சிதம்பரத்தின் உடல் எடை 4 கிலோவுக்கு மேல் குறைந்துவிட்டது. குளிர் காலம் தொடங்கவுள்ள நிலையில், டெங்கு பயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் சிதம்பரத்தை சிறையில் அடைப்பதில் எந்த நியாயமும் இல்லை. அவரை அவமானப்படுத்துவதற்காக மட்டுமே கைது செய்துள்ளனர். அவர் யார் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சாட்சிகளிடம் அவர் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறினால் அந்த சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்” என்று வாதங்களை அடுக்கினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share