rஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை ரிசல்ட்!

public

கோரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட, குறைந்த கட்டணத்திலான கொரோனா பரிசோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனாவுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளைத் தவிரத் தனியார் மருத்துவமனைகளில் இதற்காகக் குறைந்த பட்சம் ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.

இந்தச்சூழலில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் அதேவேளையில் விலை குறைந்த பரிசோதனை கருவிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல மருத்துவ நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோரக்பூர் இந்தியத் தொழில் நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், கோவிராப் என்று பெயரிடப்பட்ட, எளிய முறையில் குறைந்த கட்டணத்தில் கொரோனா பரிசோதனை கருவிகளை கண்டுபிடித்துள்ளனர். குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனையின் முடிவுகளை ஒரு மணி நேரத்தில், செல்பேசி செயலியின் வாயிலாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, பல்வேறு வணிக நிறுவனங்கள் இதற்கான உரிமத்தைப் பெறுவதற்காக இந்தியத் தொழில்நுட்ப கழகத்தை அணுகி வருகின்றன. கருத்தரிப்பு பரிசோதனை கருவி போன்று, இந்தக் கருவி வைரஸ் பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும்.

“ஆர்டிபிசிஆர் பரிசோதனை கருவிகளின் விலை ரூ.25 லட்சம் ஆகும். ஆனால் கோவிராப் கருவியின் விலை ரூ.5000ஆகும். இதில் உள்ள ஒரு பரிசோதனை கிட்டின் விலை ரூ.500 ஆகும்.

ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலக்கூறு உயிரியலாளர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும். அதே சமயத்தில், கோவிராப் பரிசோதனைகளை மேற்கொள்ளக் குறைந்தபட்ச பயிற்சி இருந்தாலே போதுமானது. ஐஐடி கோரக்பூரில் 200 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் ஆர்டிபிசிஆர் கருவிகளால் பாசிட்டிவ் என கண்டறியப்பட்ட 115 மாதிரிகளில், 108க்கு கோவிராப் கிட்களில் பாசிட்டிவ் என முடிவு வந்தது. இதன் மூலம் கோவிராப் கிட் ஆர்டிபிசிஆர் கருவியுடன் ஒப்பிடுகையில் 94 சதவிகிதம் உணர்திறன் மற்றும் 98 சதவிகிதம் தனித்துவத்தைக் கொண்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஐஐடி பேராசிரியர் சுமன் சக்கரபோர்த்தி கூறுகையில், “இந்த கருவி கிராமப்புறங்களில் பயன்படுத்த ஏற்றது. கிராமப்புற இளைஞர்களால் குறைந்தபட்ச பயிற்சியுடன் இந்த பரிசோதனையை மேற்கொள்ள முடியும். இதனை வைப்பதற்காகக் குளிரூட்டப்பட்ட ஆய்வகங்கள் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இன்ஃப்ளூயன்சா, மலேரியா , டெங்கு மற்றும் காசநோய் போன்ற நோய்களையும் இந்த கருவிகள் மூலம் கண்டறிய முடியும் என்று சக்கரபோர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தற்சார்பு இந்தியாவின் இலக்கை எட்டி உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புதிய கண்டுபிடிப்பின் வாயிலாக 500 ரூபாய் கட்டணத்தில், ஒரு மணி நேரத்தில் தரமான மற்றும் துல்லியமான பரிசோதனைகள் சாமானிய மக்களையும் சென்றடையும் எனக் கூறியுள்ள அவர், அரசு தலையிட்டு இந்த பரிசோதனை கட்டணத்தை மேலும் குறைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரை சமீப நாட்களாகப் பாதிப்பு குறைந்து வருகிறது என்றாலும், பண்டிகை மற்றும் குளிர்காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.

**பிரியா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *