மதுரையில் ஆதரவற்றோர் காப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் எந்த பாதிப்பும் இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது.
மதுரையில் ரிசர்வ்லைன் பகுதியில் சிவக்குமார் என்பவர் இதயம் அறக்கட்டளை என்ற முதியோர் காப்பகத்தை நடத்தி வந்துள்ளார். இந்த காப்பக்கத்தில் நான்கு மாதங்களாக இருந்து வந்த மனநலம் பாதித்த ஐஸ்வர்யா என்பவரின் மூத்த மகன் மாணிக்கம்(1) கொரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டதாக போலி ஆவணம் தயாரித்து, அக்குழந்தையை காப்பக உரிமையாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் விற்றுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் அசாருதீன் என்பவர் மதுரை ஆட்சியரிடம் புகாரளித்தார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே ஒரு பெண் குழந்தையும் விற்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, குழந்தைகளை விலைக்கு வாங்கிய கல்மேடு பகுதியைச் சேர்ந்த சகுபர் சாதிக், அனீஸ் ராணி, இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன், பவானி ஆகியோரையும், குழந்தைகளை விற்ற, இதயம் அறக்கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, முகவர்களாக செயல்பட்டுவந்த செல்வி, ராஜா என ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
குழந்தை விற்பனை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார், அவரது உதவியாளர் மதார்ஷா ஆகிய இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இதயம் அறக்கட்டளைக்கு சீல் வைத்த மதுரை மாவட்ட நிர்வாகம், அங்குள்ளவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்றினார்கள். பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த காப்பகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கலைவாணி என்பவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையால் “மாநில இளைஞர் விருது” வழங்கப்பட்டுள்ளது.இதே போல இந்த காப்பகத்தில் பணியாற்றிய அருண் என்பவருக்கும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் “மாநில இளைஞர் விருது” வழங்கப்பட்டுள்ளது. தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அறக்கட்டளைக்கு விருது வழங்க சிபாரிசு செய்தது யார், எதன் அடிப்படையில் விருது வழங்கப்பட்டது என சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதாஜீவன், தமிழகத்தில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் உள்ளிட்ட காப்பகங்களில் சமூக நல அலுவலர்கள், மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி, 15 நாட்களுக்குள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அறிக்கையின் அடிப்படையில் அனுமதியின்றி செயல்படும் காப்பகங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகளுக்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா உள்ளிட்ட 14 விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் எந்த பாதிப்பும் இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதையடுத்து, இரண்டு குழந்தைகளும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து முதியோர் இல்லங்களும், காப்பகங்களும் வருகிற 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
**-வினிதா**
�,”