தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் பருவம் தவறி பெய்த பருவ மழையால் மிளகாய் நடவுப்பணி தாமதமாக நடந்தது. தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்திய சமையலில் முக்கியமான இடத்தை வகிக்கும் மிளகாய் தஞ்சை மாவட்டத்தில் அய்யம்பேட்டை அருகே உள்ள குடிக்காடு, கருப்பூர், புத்தூர், மேட்டுத்தெரு, நாயக்கர்பேட்டை, இளங்கார்குடி, கூடலூர், பட்டுக்குடி ஆகிய பகுதிகளிலும், கொள்ளிடம் ஆற்றின் நடுத்திட்டு கிராமங்களான மேலராமநல்லூர், கீழராமநல்லூர் ஆகிய ஊர்களிலும் ஏராளமாக பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
படுகை நிலங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்ட பச்சை மிளகாய் தற்போது வயல்வெளிகளிலும் (நஞ்சை நிலங்கள்) சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த நிலையில் மிளகாய் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் மிளகாய் நடவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மிளகாய் விளைச்சல் குறைந்து விட்டதாகவும், விலையும் குறைந்து விட்டதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அய்யம்பேட்டை அருகே உள்ள பட்டுக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், “கடந்த பல ஆண்டுகளாக எங்கள் பகுதியில் மிளகாய் சாகுபடி செய்து வருகிறோம். டீசல் விலை உயர்வு, கூலி ஆட்கள், உரம் போன்றவற்றுக்காக ஓர் ஏக்கருக்கு சாகுபடி செலவு 75,000 ரூபாய் வரை ஆகிறது.
இந்தப் பகுதியில் தற்போது தீவிரமாக பச்சை மிளகாய் அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்த பச்சை மிளகாயை தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருவையாறு ஆகிய ஊர்களில் உள்ள மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறோம்.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாத தொடக்கத்தில் மிளகாய் கன்றுகளை நடவு செய்து விடுவோம். கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் விதைப்பதற்கும், நாற்று நடுவதற்கும் காலதாமதம் ஏற்பட்டது. பிப்ரவரி மாதம் தான் மிளகாய் நடவு செய்ய முடிந்தது.
இதனால் காலநிலை மாறி தற்போது விளைச்சல் மிகவும் குறைந்து காணப்படுகிறது. விலையும் விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகாத நிலையில் உள்ளது. தற்போது ஒரு கிலோ மிளகாய் ரூ.20 முதல் ரூ.22 வரை மட்டுமே விலைபோகிறது. இந்த தொகையில் பெரும் பகுதி மிளகாய் பறிக்கும் கூலி, வாகன வாடகை, கமிஷன் என செலவாகி விடுகிறது. ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்றால் மட்டுமே ஓரளவாவது விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.
நெல், கரும்பு போல மிளகாய் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கும் அரசு விலை நிர்ணயம் செய்து, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் மிளகாயை வெளியூர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்படும்” என்று கவலை தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
.�,