தமிழகம்: ஹெல்மெட் அணியாத 68 லட்சம் பேர் மீது வழக்கு!

Published On:

| By Balaji

தமிழகத்தில் ஹெல்மெட் அணியாததற்காக 68,76,452 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சட்ட விதிகளின்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு முறையாக அமல்படுத்தவில்லை என்றும் அதை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரியும் சென்னையைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்து வருகிறது. கடந்த காலங்களில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஒருவர்கூட ஹெல்மெட் அணிவதில்லை, இனி அவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு மீண்டும் நேற்று (மார்ச் 3) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் ஜவஹா், தமிழகக் காவல் துறை சட்டம் ஒழுங்கு உதவி ஐஜி சாம்சன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், 2018 நவம்பர் முதல் 2019 நவம்பர் வரை, ஹெல்மெட் அணியாததற்கு 68,76,452 போ் மீதும், சீட் பெல்ட் அணியாததற்கு 15,90,382 போ் மீதும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 2,07,291 போ் மீதும், போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியதற்காக 4,63,543 போ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து விதிகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டு வருவதால், 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் தமிழகத்தில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் தற்போது 38 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதிகள் வழக்கை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share