ராஜேஷ் தாஸூக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து!

Published On:

| By Balaji

பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ் தாஸூக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜேஷ் தாஸூக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் 3ஆம் தேதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் போராட்டகாரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 27 பேரை கைது செய்து 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகம் மட்டுமில்லை, இந்தியளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறோம். உரிய கோரிக்கைகளை முன் வைத்து போராடிய எங்கள் மீது காவல்துறையினர் பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அதனால், எங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று(மார்ச் 29) நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேஷ் தாஸூக்கு எதிராக போராடியதற்காக 27 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது நீதிபதி அமர்வு.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share