கல்வி தொலைகாட்சிகளில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைகாட்சி வழியாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் நேரடி வகுப்புகளில் இருக்கும் கவனம், ஆன்லைன் வகுப்புகளில் இல்லை என்றும், மாணவர்கள் கடமைக்கு வகுப்புகளை கவனிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆன்லைன் மற்றும் கல்வி தொலைகாட்சி வாயிலாக கற்பிக்கப்படும் பாடங்கள் மாணவர்களை முறையாக சென்றடைகிறதா? ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துகிறார்களா? என்பதை ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் பிறப்பித்த உத்தரவில்,”அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் பள்ளி கட்டடம், கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை சீர் செய்து செம்மைப்படுத்த வேண்டும்.
தலைமையாசிரியர்களும்,ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களின் வீட்டிற்கு சென்று கல்வித் தொலைகாட்சியில் நடத்தப்படும் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகிறதா? அவர்கள் ஆர்வமுடன் பார்க்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். ஆசிரியர்கள் நன்றாக பாடம் கற்பிக்கிறார்களா? அவர் நன்கு புரிந்து பாடம் நடத்துகிறா என்று பார்க்கவேண்டும்.
அதன்படி, கல்வி தொலைகாட்சி மூலம் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும். அதுபோன்று எஸ்.சி.,எஸ்.டி வகுப்பு மாணவர்களை பள்ளியில் அதிகமாக சேர்க்கும் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் சேர்ந்திருக்கின்றனர்.
தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு தடை விதிக்கக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,