H
சேலத்தில் எஸ்.பி.ஐ ஏடிஎம் ஒன்றில் ரூ.200க்கு பதில் ரூ.500 வந்ததை அடுத்து, வாடிக்கையாளர்கள் பலர் ஏடிஎம் முன் குவிந்து பணத்தை எடுத்து சென்றுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பண்ணப்பட்டியில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஏடிஎம் வைக்கப்பட்டுள்ளது. சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஏடிஎம் அமைந்துள்ளதால் அங்கு எப்போதும் வாடிக்கையாளர்கள் வந்து பணம் எடுத்துச் செல்வார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (நவம்பர் 7) மாலை இந்த ஏடிஎம் இயந்திரத்தில் வாடிக்கையாளர் ஒருவர் ரூ.200 எடுக்க முயன்ற நிலையில் ரூ.500 நோட்டு வந்துள்ளது. ஆனால் ரூ.200 மட்டுமே எடுத்ததாக மொபைலுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த செய்தி சிறிது நேரத்தில் அப்பகுதியில் தீயாய் பரவியுள்ளது. இதனால் அந்த ஏடிஎம் முன்பு கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது.
நள்ளிரவு வரை அந்த ஏடிஎம்க்கு வந்த பலர் ரூ.200க்கு பதில் ரூ.500 நோட்டை எடுத்துச் சென்றிருக்கின்றனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த வங்கி அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து ஏடிஎம்-ஐ பூட்டியுள்ளனர். ரூ.200 வைக்க வேண்டிய ரேக்கில் ரூ.500 வைத்ததால் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுவரை எவ்வளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது, யார் யார் எடுத்துச் சென்றார்கள், பணத்தை ஏடிஎம்-ல் நிரப்பியது யார் என்பது குறித்து வங்கி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்கான நஷ்டத்தைப் பணம் நிரப்பும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
�,