qதத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

Published On:

| By Balaji

நா.மணி

வரலாற்றிலும், சமகால அரசியலிலும் எத்தனையோ தத்துப் பிள்ளைகளைப் பார்த்திருக்கிறோம். சொத்துக்காகவும், அதிகாரத்துக்காகவும் சண்டை போடும் அந்தத் தத்துப் பிள்ளைகளுக்கு இடையே, ஈரோட்டில் நாம் கண்ட ஒரு தத்துப் பிள்ளை வித்தியாசமான பாச வரலாற்றைப் பறை சாற்றுவதாக இருக்கிறது.

அவர் ஒரு பொருளியல் வல்லுநர். எக்கானாமெட்ரிக்ஸ் என்ற தனிப் பிரிவிலும் நிபுணர். கல்வி, உழைப்பு பொருளாதாரம், சூழலியல் ஆகியவற்றில் உலகத் தரம்வாய்ந்த, காத்திரமான பல ஆய்வுகளைச் செய்து வருபவர். அரசுப் பள்ளியிலும், பின்னர் சிறு நகரங்களில் உள்ள அரசுக் கல்லூரிகளிலும் படித்து, உலக அளவில் பொருளியல் வல்லுநராகப் பிரகாசிக்க முடியும் என்பதற்கு அவர் ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருபவர்.

நிறைய சகோதர சகோதரிகளோடு பிறந்தவர். அவருடைய தாய்க்குப் போதும் போதும் என்று கூறும் அளவுக்குக் குழந்தைகள் பிறந்தன. ஆனால், அவருடைய பெரியம்மாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இன்றைய தேதிக்கு எழுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர் அவருடைய பெரியம்மா. கணவர் ஒரு கடப்பாடுமிக்க அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர். பிள்ளை இல்லாத தம்பதியினர் நம் பொருளியல் வல்லுநரை, ஒன்றரை வயது குழந்தையாக இருக்கும்போதே தத்து எடுத்துக்கொண்டனர்.

ஈரோட்டைச் சேர்ந்த அர்ப்பணிப்புமிக்க அந்த ஆசிரியர், தனக்குக் கிடைத்தது தத்துப் பிள்ளை அல்ல எனக் கருதி வளர்த்தார். ஆசிரியப் பணியை, தவ வாழ்வாகக் கருதி, வாழ்ந்து வரும் வாழ்க்கைக்கு, கடவுள் அளித்த கொடையாக அந்தக் குழந்தையைக் கருதினார். திட்டமிட்டு சான்றோன் ஆக்கும் பணிகளைச் செய்து வந்தார் ஆசிரியர் குட்டியப்பன்.

அலமேலு அம்மாள், நாடு சுதந்திரம் அடையும்போதே, பள்ளி இறுதி வகுப்பை முடித்து வைத்திருந்ததால், பெரும் பணி வாய்ப்புகளுக்கான‌ நம்பிக்கையோடு இருந்தார். ஆனால், கணவர் குட்டியப்பன், சிறந்த குடும்பத் தலைவியாக இருப்பது சிறப்பு என்று நினைத்தார். கணவனின் மனதைப் புரிந்துகொண்டு இல்லற வாழ்வை இனிதே நடத்தி வந்தார். தனக்குக் குழந்தையில்லை என்று ஆனதும், தனது அனைத்து ஆசைகளையும் லட்சியங்களையும் தனது தங்கை மகன்மீது கொட்டி வளர்த்தார்.

அக்குழந்தை மிகவும் சுட்டிப்பிள்ளை. பத்துக் குழந்தைகளின் குறும்பை மொத்தமாக செய்யும் தன்மை உடையது. ஆனால் படிப்பு என்று வரும்போது, குறும்புத்தனத்தை மூட்டை கட்டி விடும் அக்குழந்தை. குழந்தையாக இருக்கும்போது மட்டுமல்ல; வளர்ந்து வாலிபன் ஆன பிறகும்கூட அந்த இரண்டு பண்புகளும் மாறவில்லை. படிப்பிலும் முதன்மை. சேட்டைகளிலும் முதல் மாணவராகவே விளங்கி வந்தார். முனைவர் பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்று, சில ஆண்டுகள் பூனாவில் உள்ள கோகலே அரசியல் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றினார். பின்னர், பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற ஆராய்ச்சி மையமான இந்திய சமூக பொருளாதார மாற்றத்துக்கான ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகவும் இயக்குநராகவும் பதவி வகித்து வருகிறார்.

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் பதவியை, பேரறிஞர் அண்ணா கூறியதைப்போல, தோளில் கிடக்கும் துண்டாக கருதி உதறித் தள்ளிவிட்டு, மீண்டும் தனது மனதுக்கு நெருக்கமான பெங்களூரு சமூக பொருளாதார ஆராய்ச்சி மையத்துக்கே திரும்பி விட்டார். தாயார் உடல் ஆரோக்கியத்துடன் தன்னுடன் பெங்களூரில் தங்கியிருந்த காலங்களில், அந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் தனது நண்பர்கள் அனைவருக்கும் அவர் தாயார்தான். தனது மகனின் ஆய்வு மாணவர்கள் அனைவரும் தனது பேரப் பிள்ளைகள்தான்.

மாலையில் வீடு வரும் எவரும் உணவு உண்ணாமல் திரும்பிச் செல்லக் கூடாது. அப்படி தனது மகனின் நண்பர்களையும் மகன்களாக கருதியதன் விளைவாக, அலமேலு அம்மாள் ஈரோடு வந்த பிறகும்கூட அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள வீடு தேடி வருவார்கள். ஓர் ஆய்வு மாணவனுக்கு அவனது வீட்டில் திடீர் திருமணம் செய்து வைத்து விட்டனர். அவர் வீடு பார்த்து, வருவாய் தேடிக்கொள்ளும் வரை தன்னுடனேயே வைத்துக்கொண்டார் அலமேலு அம்மா.

கர்நாடக அரசின் மிக உயரிய விருதான கெம்பே கௌடா விருது, நோபல் பரிசு பெற்ற ஜான் கென்னத் ஏரோ அவர்களிடம் சூழலியல் ஆய்வுக்கான விருது, இப்படி பல விருதுகள். 25 நாடுகளில் சிறப்பு சொற்பொழிவுகள். பல பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியர். இவை தவிர கர்நாடக முதல்வரின் பொருளாதார ஆலோசகர், திட்டக்குழு உறுப்பினர் என கர்நாடக அரசில் பல பொறுப்புகள். பல கொள்கை உருவாக்க குழுக்களில் பங்களிப்பு. தலைமை பொறுப்பு.

தனது முதுகலை பட்டப்படிப்பு முடிந்து, ‌ ஆராய்ச்சிப் படிப்பு முதலே, தனது பணிகளில் ரெக்கை கட்டி பறந்தார். எத்தனை பணிகள் இருந்தாலும், தன் தாயின் மீது அன்பு செலுத்துவதையும் அவரை கவனித்து கொள்வதையும் கன நேரம்கூட அவர் மறந்தது இல்லை.

ஆறு மாதங்கள் பார்க்கவில்லை என்ற ஏக்கம் அந்த தாய்க்கு இருந்தாலும், பார்த்த மாத்திரத்தில் கட்டி அணைத்துக்கொள்வதிலும், காலில் விழுந்து சாஷ்டாங்கமாக ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதிலும் மறக்கடிக்கச் செய்து விடுவார். இந்தியாவில் குறிப்பிடத்தக்க பொருளியல் வல்லுநராக விளங்குவதற்கு அவருடைய தாயே காரணம். அவர் பொருளாதாரம் படிக்க தொடங்கிய காலம் முதல், ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும், ஆறு மணிக்கு அழைப்பு வந்து விடும். தனது வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு மீண்டும் தூங்கும்படி அன்போடு கேட்டுக் கொள்வார். வாழ்தின் அடிநாதம் இதுதான். ஒவ்வொரு முறையும், “மகனே! நோபல் பரிசு பெறும் பொருளியல் வல்லுநராக நீ வளர வேண்டும்” என்பார். வருங்காலத்தில் ஒரு நோபல் பரிசு அவரைத் தேடி வரும் அளவு அவரது ஆய்வுகள் தகுதியானவை.

அலைபேசியில் அழைத்தாலும் சில நிமிடங்கள்தான். பெங்களூரில் இருந்து ஈரோட்டுக்கு ஓடோடி வருவார். அப்போதும் நேரில் சில நிமிடங்கள்தான். அந்தக் கொஞ்ச நேரத்தில் தன் தாயின் மீது உள்ள மொத்த பாசத்தையும் கொட்டித் தீர்த்து விடுவார். அவர் ஒரு சிவபக்தர். அந்த சிவனுக்கு பூஜை செய்வது போலவே தன் தாயையும் பூஜித்து வந்தார். தன்னுடன் வருவோர் அனைவரையும் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளும்படி கூறுவார். அந்த அலமேலு தாயாரும், தனது சொத்துகள் முழுவதையும் தன் மகனுக்கு உயில் எழுதி வைத்து விட்டு, தனது இறுதிப் பயணத்துக்காக காத்திருந்தார். “தன் வயிற்றில் ஒரு பிள்ளை பிறக்கவில்லை. இது தத்துப் பிள்ளை என்ற உணர்வே அவருக்கு அற்றுப் போய்விட்டது” என்று அவரது மனதுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொள்வார்.

தனது தாய்க்கு கோயில் கட்டி கும்பிட வேண்டும் என்பது அந்த மகனின் தணியாத தாகம். அதற்கான நிலத்திற்கு மட்டுமே 50 லட்சம் வரை செலவு செய்ய தயாராக இருந்தார். தனது வேகமான ஓட்டத்தில் நின்று, அப்படி ஓர் இடத்தை தனது சொந்த ஊரான ஈரோட்டில் வாங்க முடியவில்லை. இந்த நிலையில்தான் 90 வயது ஆனாலும், ஆரோக்கியமாக இருந்த அந்த அலமேலு அம்மாவுக்கு திடீர் மரணம் ஏற்பட்டு விட்டது.

மாலை 7 மணிக்கு தனது தாயின் மரணச் செய்தி கேட்ட அவர், விடிவதற்குள் ஓர் இடத்தை வாங்கி அதில் புதைத்து கோயில் கட்டிவிட முடியாதே என்று தனது நண்பர்களிடம் கத்திக் கதறினார். இது சாத்தியமில்லை என்று தெரிந்தாலும் அந்த மனம் அரற்றியது.

அந்தக் கோயிலைக் காட்டிலும், நீண்ட காலம் தன் தாயை, தானும் இந்த சமூகமும் நினைவு கூறத் தக்க பணிகளை, தாயின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி செய்ய முடியும், நினைவுகூரத்தக்க பணிகளை செய்ய முடியும் என்று கூறிய பின்னர் அமைதியானார்.

தன் வயிற்றில், ஒரு பிள்ளை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் கடுகளவும் இல்லை அவருக்கு. ஆனால், தன் வயிற்றில் ஒரு பிள்ளை பிறந்திருந்தாலும் இப்படி ஓர் அறிவாளியாக வளர்ந்து இருக்குமா என்ற எண்ணம் அவருக்கு வந்தது உண்டு. தனது தாயை இஷ்ட தெய்வமாக வணங்கி மகிழ்ந்து வந்த மகன். இதுவன்றோ தத்துப் பிள்ளைக்கும், வளர்ப்பு தாய்க்கும் இடையான உறவாக இருக்க முடியும்!

குறிப்பு: 17/10/21 அன்று ஈரோட்டில் இயற்கை எய்திய அலமேலு அம்மாவின் மகன், பேராசிரியர் எஸ்.மாதேஸ்வரன், நாடறிந்த பொருளியல் வல்லுநர்.

**கட்டுரையாளர் குறிப்பு**

பேராசிரியர் மணி, பொருளாதாரத் துறை தலைவர். ஈரோடு கலை அறிவியல் கல்லூரி. ஈரோடு

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel