அதிமுக – பாஜக: கூட்டணியை உடைக்க பொன்.ராதாவின் குமரி பிளான்!

Published On:

| By Balaji

உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சித் தலைவர்கள் கவுன்சிலர்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்ததில் பாஜக கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால் அதிமுகவோடு கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா என்ற விவாதம் பாஜகவுக்குள் இப்போது தீவிரமாகியிருக்கிறது.

தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ தமிழகத்தில் பாஜகவுக்கு தலைவர் இல்லாததால் கூட்டணி பற்றி அக்கட்சியின் மத்திய தலைமைதான் முடிவெடுக்கும். இங்குள்ளவர்கள் சொல்வதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 21) தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு, “நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது” என்று சிம்பிளாக பதில் அளித்தார்.

ஆனால் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “ உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி எடுபடாது என்பதை நாங்கள் அனுபவப்பூர்வமாக கண்டிருக்கிறோம். கடந்த மக்களவைத் தேர்தலின்போதும், சட்டமன்ற இடைத் தேர்தலின்போதும் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தோம். உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி இன்னும் அமைக்கப்படவில்லை. அதுகுறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். உள்ளாட்சித் தேர்தலில் 1 லட்சத்திற்கு அதிகமாக வேட்பாளர்களை பாஜக சார்பில் களமிறக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்” என்று கூறியிருக்கிறார்.

அதிமுக-பாஜக கூட்டணியை உடைக்க பாஜகவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக முயற்சி செய்வதாகக் கூறுகிறார்கள் பாஜகவிலேயே. இதுபற்றி கமலாலயத்தில் விசாரித்தோம்.

“தமிழகத்தில் இப்போது பாஜக தலைவர் பதவி காலியாக இருப்பதால் மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ வினாயகத்திடம் தனக்கு இருக்கும் ஆர்.எஸ்.எஸ்,. நெருக்கத்தைப் பயன்படுத்தி தான் நினைப்பதை நடத்திக் காட்டிட முயற்சிக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். ஏற்கனவே நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும், ‘அதிமுகவுடன் கூட்டணி பற்றி தலைமை முடிவெடுக்கும்’ என்று சொல்லி குழப்பத்தை ஏற்படுத்தினார் பொன்.ராதாகிருஷ்ணன். ஆனால் அப்போதே, ‘பாஜக கூட்டணி தொடரும்’ என்று சேலத்தில் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி.

இதேபோல உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜகவை தமிழகத்தில் தனித்து நிற்க வைக்க வேண்டும் என்பதில் பொன்.ராதாகிருஷ்ணன் முனைப்பாக இருக்கிறார். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

தமிழகத்திலேயே பாஜகவுக்கு உள்ளாட்சியில் அதிக வாய்ப்புள்ள பகுதி என்றால் அது குமரி மாவட்டம். ஆனால் அதிமுக கூட்டணியில் இருக்கும்பட்சத்தில் அங்கே தளவாய் சுந்தரம் முடிவு செய்பவர்தான் வேட்பாளராக இருப்பார். எனவே பொன்.ராதாகிருஷ்ணனால் தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்கிட முடியாது. மாறாக தனியாக நின்றால் குமரி மாவட்டத்தில் சில பதவிகளை பாஜக ஜெயித்து அதன் மூலம் டெல்லி தலைமையிடம் தான் இழந்த நற்பெயரை மீட்டுக் கொள்ளலாம் என்று திட்டமிடுகிறார் பொன்.ராதாகிருஷ்ணன். அதனால்தான் பாஜக ஒரு லட்சம் இடங்களில் போட்டியிடத் தயார் என்றெல்லாம் சொல்கிறார். பாஜக லட்சம் இடங்களில் போட்டியிட்டாலும் குமரியில் சில இடங்களில் மட்டுமே ஜெயிக்கும் என்பது அவருக்குத் தெரியும். குமரியில் தனது அரசியலுக்கான இருப்பு வேண்டும் என்பதற்காக தனித்து நிற்கலாம் என்று சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஆனால் தமிழக பொறுப்பாளர் பி.எல். சந்தோஷிடம் மற்ற தலைவர்கள் எல்லாம், ‘100 இடத்துல நின்று 2 இடத்துல ஜெயிக்கிறதை விட கூட்டணி வைத்து 25 இடங்களில் நின்று 10 இடங்களில் ஜெயிப்பதுதான் கட்சிக்கு நல்லது. உள்ளாட்சித் தேர்தலில் தனியாக நின்று தோல்வி அடைந்துவிட்டால் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வார்த்தையை எந்தக் கட்சியும் மதிக்காது. எனவே அதிமுக கூட்டணியிலேயே தொடரவேண்டும்’ என்று கூறியிருக்கிறார்கள்.வழக்கம்போல தலைமைதான் முடிவெடுக்கும்” என்று கூறினார்கள்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share