பேராசிரியர் நா.மணி
சுற்றிலும் உள்ள எந்த கிராமத்தில் இருந்து வந்தாலும் குறைந்த பட்சம் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரவேண்டும். வயல் காட்டின் நடுவே அமைந்துள்ளது அந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. ஆறு அடிக்கு மேல் சுற்றுச் சுவர். உள்ளே அடர்ந்த மரங்கள். நல்ல பாதுகாக்கப்பட்ட குடிநீர். ஆரோக்கியமான கழிப்பறை வசதி. ஒரு வகுப்புக்கு ஒரு வகுப்பறை. ஒரு வகுப்பறைக்கு ஓர் ஆசிரியர் என்று இயங்கி வரும் பள்ளி. முன்பு நாடோடிகளாக இருந்து, இப்போது ஓரிடத்தில் தங்கி வாழும் மக்கள், கல்லுடைப்போர், நகர்ப்புற சில்லறை வேலைகளை நம்பி பிழைக்க மாநிலத்தின் பல பாகங்களிலும் இருந்தும் வந்து தங்கி வாழும் மக்கள். இவர்களின் பிள்ளைகளே இப்பள்ளிகளுக்கு ஆதார சுருதி. சுமார் இருநூறு மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
**அரசுப் பள்ளிகளை நோக்கி…**
மாணவர் சேர்க்கை தொடங்கியதும் கொஞ்சம் உயர் ரகக் காரில் இருந்து இறங்கி இரண்டு குழந்தைகளோடு வந்த பெற்றோர்களைக் கண்டு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆச்சரியம். நிச்சயமாக சேர்க்கைக்கு வரமாட்டார்கள் என்று நினைத்தார்கள். அவர்கள் வந்து சேர்க்கை முடித்து சென்றதை பெருத்த ஆச்சரியமாக பேசிக் கொண்டுள்ளார்கள். இப்படி தமிழ் நாட்டின் பல பாகங்களிலும் நடந்து வருகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் பத்து லட்சம் பேர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருப்பதாகவும் செப்டம்பர் முடிவு பதினைந்து லட்சத்தை இது நெருங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கையை விட இந்த ஆண்டு 25 விழுக்காடு அதிகம் என்கிறார் பள்ளிக் கல்வி அமைச்சர். அதாவது, நான்கில் ஒரு பங்கு மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்கிறார் அமைச்சர்.
தமிழ் நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சற்றேறக்குறைய இதே நிலைதான். ஹரியானா போன்ற சிறிய மாநிலங்களில் கூட 87 000 மாணவர்கள், தனியார் பள்ளிகளில் இருந்து விடைபெற்றுக் கொண்டு, அரசுப் பள்ளிகளில் இணைந்து உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளில் வந்து சேர்ந்துள்ளனர். கொரோனாவின் கொடுமை. கொரோனாவை சரியாக கையாளத் தெரியாமல் எடுத்த கண்மூடித்தனமாக முடிவுகள் மக்களின் வாழ்வாதாரத்தை குதறி போட்டுவிட்டது. தங்களின் ஈடுசெய்ய இயலாத வருவாய் இழப்பை ஈடுகட்ட தங்கள் முன்னிருந்த ஆகச் சிறந்த வழியாக அவர்கள் கண்டறிந்தது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது.
வருவாய் நிலைகள் என்னவாக இருந்தபோதும் நிரந்தரப் பணியில் இல்லாத பலரும் ஆடித்தான் போயிருக்கிறார்கள். ஒரு நகரத்தில் இருக்கும் பள்ளிகளிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் படிக்க வைப்பதே கௌரவம் என்று நினைத்து சேர்ந்தவர்கள் கூட கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்று பள்ளியின் வாயில் முன்பு போராட்டம் செய்கிறார்கள். சாதாரண நிலையில் கூட பள்ளிக் கட்டணங்களை செலுத்த அசாதாரணமான சூழ்நிலைகளை அனுபவிப்பவர்களாக இருக்கிறார்கள். இப்படி எல்லாத் தரப்பில் இருந்தும் பலரை அரசுப் பள்ளிகளை நோக்கி தள்ளியிருக்கிறது கொரோனா. மாணவர்கள் இல்லை என்று மரணத்தை தழுவிய பள்ளிகள் கூட மீண்டும் புத்துயிர் பெற்றுள்ள செய்திகளை பத்திரிக்கைகள் வாயிலாக அறியமுடிகிறது.
தங்கள் பொருளாதார நிலைமைகளால் உந்தப்பட்டு அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்தாலும், தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் பள்ளிகளின் தரம் பற்றி விசாரித்து அறிந்து திருப்தி அடைந்தால் மட்டுமே சேர்க்கிறார்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் உள்ளூர் சமூகத்தோடு இணைந்து எடுத்த முயற்சிகள் சமூக வலைத்தளங்களில் விரவிக் கிடக்கும் இதுபற்றிய செய்திகள் எல்லாம் கலந்து தான் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்கிறார்கள்.
**அரசுப் பள்ளிகள் முன்பு போல இல்லை**
அரசுப் பள்ளிகள் முன்பு போல் இல்லை என்பதையும் இந்த பெற்றோர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். டைல்ஸ் போட்ட வகுப்பறைகள் சுத்திகரிப்பட்ட குடிநீர் ,கம்ப்யூட்டர் வசதி, ஸ்மார்ட் வகுப்பறைகள், கழிப்பறை வசதி என பல வசதிகள் இருப்பது தற்போது தான் வெளிச்சத்திற்கு வருகிறது. மாணவர் எண்ணிக்கை காரணமாக ஈராசிரியர், மூன்று ஆசிரியர்கள், இரண்டு மூன்று வகுப்புகள் பல பாடங்களை ஒரே ஆசிரியர் நடத்தும் சூழ்நிலை இவையெல்லாம் மாணவர்கள் எண்ணிக்கை கூடும் போது சரி செய்யப்படும். அப்போது அரசுப் பள்ளிகளின் தரம் இயல்பாக மேலெழுந்து வரும்.
அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் கட்டணம் இல்லாக் கல்வி, இலவச புத்தகங்கள், நோட்டுகள், பள்ளிச் சீருடைகள், காலுக்கு செருப்பு, புத்தகப் பை ,ஜாமன்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட கற்றல் பொருட்கள், தரமான நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆய்வகப் பரிசோதனை பொருட்கள் இப்படிக் கிடைக்கும் ஏராளமான பொருட்களோடு தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்க தடுத்து வந்த மனம் அல்லது காரணிகள் எது?
அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதே கௌரவ குறைபாடு என்ற சூழ்நிலையை உருவாக்கியது யார்? கொரானா நேரத்திலும் பொங்கல் பண்டிகை நேரத்திலும் நியாய விலைக் கடையில் கால் கடுக்க நின்று இலவச பொருட்களை பெற்று வரும் மனம் அரசுப் பள்ளிகள் விசயத்தில் எங்கே போனது? தனியார் பள்ளி நிர்வாகங்களால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது என்பதன்றி வேறென்னவாக இருக்க முடியும்? அதே தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தான் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வரும் போது பதறுகிறது. போதுமான குடிநீர் வசதி, வகுப்பறைகள், கழிப்பறைகள், மேஜை நாற்காலிகள், கணிணி வசதிகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகள் இருக்குமா? என்று சந்தேகமாக இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறது.
அப்படியே அதன் பேரில் ஓர் ஐயம் இருந்தாலும் அதுபற்றி கேள்வி எழுப்ப வேண்டியவர்கள் அக்குழந்தைகளின் பெற்றோர்கள் தானே! இந்தக் கவலை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு எதற்கு? இதுதான் உண்மையான ஆதங்கம் எனில் உண்மையில் மேற்கண்ட வசதிகள் எத்தனை தனியார் பள்ளிகளில் முழுமையாக இருக்கிறது? 2009 கல்வி உரிமை சட்டப்படி ஒரு பள்ளியாக இயங்கத் தகுதி உடைய பள்ளிகள் என்று அந்தக் கூட்டமைப்பால் வெளியிட இயலுமா? தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறி அரசுப் பள்ளிகளில் சேர்வது என்பது இது போன்ற பள்ளிகளில் இருந்து தான் அதிகம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கொரோனாவின் பொருளாதார தாக்கங்கள் மட்டுமல்லாமல் அரசுப் பள்ளிகளில் இணையும் மாணவர்களுக்கு தற்போது வேறு ஒரு முக்கியமான வாய்ப்பும் அதிகரிக்கிறது. நீட் தேர்வில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பத்து விழுக்காடு ஒதுக்கீடும் நல்ல பயனைத் தரும். இதேபோல் எல்லாவிதமான வேலைவாய்ப்பு சார்ந்த உயர் கல்வி நிலையங்களிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.
**தமிழ் வழி மாணவர்களுக்கு 20 விழுக்காடு**
இதுதவிர, தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20 விழுக்காடு என்ற அரசு ஆணையும் பல விதங்களில் பயனின்றி கிடக்கிறது அதனைப் பயனுள்ளதாக மாற்றினால் அரசுப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை கூடும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு என்பது அந்த வேலைக்கான குறைந்த பட்ச கல்வித் தகுதியில் இருந்துதான் தீர்மானம் செய்யப்படுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு மேல் குறைந்த பட்ச கல்வித் தகுதி தீர்மானிக்கப்படும் பல அரசுப் பணிகளில் இந்த ஆணையை உள்ளபடியே பயன்படுத்த முடியவில்லை. முதுகலை பட்ட வகுப்பு சார்ந்த வேலை என்னும் போது அது மேலும் பாதிப்பை உருவாக்குகிறது. உதாரணமாக கல்லூரியில் உதவிப் பேராசிரியராக நியமனம் பெற ஒருவருக்கு எம்.ஏ பொருளாதாரம் என்று வைத்துக் கொள்வோம்.
இந்த 20 விழுக்காடு தமிழ் வழிக் கல்வி ஒதுக்கீடு படி அவர் எம்.ஏ பொருளாதாரம் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். எம்.ஏ பொருளாதாரம் அரசுக் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்லூரிகளிலும் ஆங்கில வழியில் தான் இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் சிரமப் பட்டு படித்து சென்ற மாணவர்களும் இங்கு ஆங்கில வழிக் கணக்கில் வந்துவிடுகிறார்கள். தமிழ் வழி ஒதுக்கீட்டில் யாரும் விண்ணப்பிக்க வில்லை. நேர்முகத் தேர்வுக்கு வரவில்லை என்றால் ஆங்கில வழியில் படித்தோரை அந்த பணியிடத்தில் நியமிக்கலாம் என்ற அரசின் வழிகாட்டல் அடிப்படையில் தான் இந்த ஒதுக்கீடுகள் நிரப்பப் படுகிறது. இதுதவிர பட்டப் படிப்பில் கூட எல்லா கல்லூரிகளிலும் அனைத்து பாடங்களும் தமிழ் வழியில் இல்லை. குறிப்பாக கலைப் பாடங்கள் மட்டுமே தமிழ் வழியில் இருக்கும். சில கல்லூரிகளில் அரிதாக அறிவியல் பாடங்களும் தமிழ் வழியில் இருக்கலாம். தனியார் சுயநிதி கல்லூரிகளிலும் தமிழ் வழி இல்லவே இல்லை. தொடக்கப் பள்ளி முதலில் அரசுப் பள்ளிகளில் படித்து அம்மாணவர்கள் உயர்கல்வியில் தமிழ் வழியில் படிக்காமல் போனது அவர்கள் குற்றம் அல்வே!
இத்தகைய சூழ்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த ஏழை எளிய மக்கள் கூட இந்த 20 விழுக்காடு தமிழ் வழி படித்த மாணவர்கள் பயன்படுத்த முடியவில்லை. **உண்மையில் தமிழ் வழி ஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்க வேண்டும் எனில் அதனை பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழில் படித்தவர்கள் ஒதுக்கீடு என்று மாற்ற வேண்டும். அதில் அனைத்து வகை படைப்பூக்கம் மிக்க மாணவர்களும் பயன் பெறுவர்.** அப்படி தமிழ் நாடு அரசு செய்ய முன்வந்தால் அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்க முன் வருவோர் எண்ணிக்கை மேலும் பன்மடங்கு உயரும்.
**அரசு செய்ய வேண்டியது என்ன?**
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 25 விழுக்காடு அதிகரித்துள்ள பின்னணியில் அரசு கீழ்காணும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
1) இப்போது அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள அனைத்து மாணவர்களுக்கும், தற்போது படித்து வரும் மாணவர்களுக்கு கொடுத்துள்ள அனைத்து வகை பொருட்களையும் உடனடியாக வழங்க வேண்டும்.
2) தற்போது அதிகரித்து உள்ள மாணவர்கள் சேர்க்கை எந்தெந்த வகைப் பள்ளிகளில் என்பதை அரசு வெளியிட வேண்டும். அத்தோடு அவை கிராமப் புறங்களிலா நகர்புறங்களிலா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
3) தனியார் பள்ளி கூட்டமைப்பினர் எழுப்பும் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது மாணவர்கள் சேர்ந்துள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் அனைத்து வகை உள்கட்டமைப்பு வசதிகளையும் போதுமான அளவு உத்திரவாதம் செய்ய வேண்டும். உடனடியாக அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
4) தற்போது அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நேரத்தில் ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் படித்து கொண்டு இருக்கும் மாணவர்களில் பலர் வறுமையின் காரணமாக குழந்தை தொழிலாளராக பணியாற்றி வருவதாகவும் இவர்களும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அக்குழந்தைகள் திரும்புவது உத்திரவாதம் இல்லை என்று அஞ்சப்படுகிறது. இவர்கள் அனைவரையும் பள்ளிகளில் இணைப்பதை அரசு உத்திரவாதம் செய்ய வேண்டும்.
கல்வி மருத்துவம் ஆகிய இரண்டும் ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் கடமையாகவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் என்ன நடக்கும்? எவ்வளவு தூரம் துயர் படவேண்டும் என்பதற்கு இந்த கொரோனா காலமே மிகச் சிறந்த உதாரணம். இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு கல்வி மருத்துவம் எங்கள் உரிமை. அதனை இலவசமாக தரமாக தர வேண்டியது அரசின் கடமை என்ற முழக்கத்தை குடிமைச் சமூகம் எப்போது முன்வைக்கப் போகிறது?
**கட்டுரையாளர் குறிப்பு**
பேராசிரியர் நா, மணி, மீண்டெழும் அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர்.
�,”