சென்னை எம்ஐடியில் 46 மாணவர்களுக்கு கொரோனா!

Published On:

| By Balaji

சென்னை, குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடியில் 46 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். அதற்கேற்றாற்போல் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2,135 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்றிலிருந்து 828 பேர் குணமடைந்த நிலையில் 1,307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதுபோன்று தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2731 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 1489 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று நோய் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான ஆலோசனைகளும் நடைபெற்று வருகிறது.

**46 மாணவர்களுக்கு கொரோனா**

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனத்தில் படித்து வந்த 46 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனத்தின் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவர்களுக்கு தொடர்ச்சியாக சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்துள்ளன. இதையடுத்து, அங்குள்ள 1,417 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் பல மாணவர்களின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளதால், மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூறுகையில், எம்ஐடி நிறுவனத்துக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அரசு விதித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

**டெங்கு காய்ச்சல்**

தமிழ்நாட்டில் சென்னை மக்களை கொரோனா மிரட்டி வருகையில், கோவை மாவட்டத்தை கொரோனாவுடன் சேர்த்து டெங்கு காய்ச்சல் மிரட்டி வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் 32 குழந்தைகள் உள்பட 47 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 40க்கு மேற்பட்ட இடங்கள் டெங்கு ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.கோவை மாநகர் மட்டுமில்லாமல், புறநகரிலும் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share